போலீசாருக்கு கொரோனா பரிசோதனை


போலீசாருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 21 Jan 2022 7:55 PM GMT (Updated: 21 Jan 2022 7:55 PM GMT)

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

நெல்லை:
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

கொரோனா பரவல் அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. போலீசார், வங்கி அதிகாரிகள், டாக்டர்கள், அணுமின் நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பாளையங்கோட்டை போலீஸ் கேண்டீனில் பணியாற்றிய 5 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போலீஸ் கேண்டீன் மூடப்பட்டது. இதேபோல் களக்காடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 5 போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் என ஏராளமான போலீசார் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

பரிசோதனை
இந்த நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் துரைகுமார் உத்தரவின்பேரில் அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி, பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தினமும் 100 பேர் வீதம் அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

அபராதம் 
கொரோனா பரவல் காரணமாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வருகின்ற அனைத்து பயணிகளுக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வருகின்ற பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் ரெயில் நிலையத்தில் தடுப்பூசி போடும் பணியும் மும்மரமாக நடந்து வருகிறது. ரெயில்களிலும் சுகாதார துறையினர் மற்றும் போலீசார் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர்.
நெல்லை மாநகர பகுதியில் சுகாதாரத்துறையினர் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

Next Story