‘ஹனிடிராப்’ முறையில் அர்ச்சகரிடம் ரூ.49 லட்சம் பறிப்பு; தம்பதி கைது


‘ஹனிடிராப்’ முறையில் அர்ச்சகரிடம் ரூ.49 லட்சம் பறிப்பு; தம்பதி கைது
x
தினத்தந்தி 21 Jan 2022 9:31 PM GMT (Updated: 21 Jan 2022 9:31 PM GMT)

மங்களூருவில் ‘ஹனிடிராப்’ முறையில் அர்ச்சகரிடம் ரூ.49 லட்சம் பறித்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு: மங்களூருவில் ‘ஹனிடிராப்’ முறையில் அர்ச்சகரிடம் ரூ.49 லட்சம் பறித்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

2-வது திருமணம்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சனிவாரசந்தே பகுதியை சேர்ந்தவர் பவ்யா (வயது 35). இவருடைய முதல் கணவர் மஞ்சுநாத். இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுநாத்தை பவ்யா பிரிந்தார். இதையடுத்து ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடுவை சேர்ந்த ராஜூ என்கிற குமார் என்பவரை பவ்யா 2-வதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பதவினங்கடி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 

இந்த நிலையில் அவர்கள் சிக்கமகளூருவை சேர்ந்த அர்ச்சகர் ஒருவரை அணுகி, தங்களுக்கு நிம்மதி இல்லை, வீட்டில் வந்து பூஜைகள் செய்யும்படி கூறியுள்ளனர். அதன்படி அந்த அர்ச்சகரும் பவ்யாவின் வீட்டுக்கு வந்து பூஜை செய்தார்.
 
ரூ.49 லட்சம் பறிப்பு

அப்போது பவ்யா, அந்த அர்ச்சகரை உல்லாசமாக இருக்க வரும்படி அழைத்துள்ளார். முதலில் மறுத்த அர்ச்சகர், பின்னர் பவ்யாவுடன் உல்லாசமாக இருக்க சம்மதித்துள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் பதவினங்கடியில் உள்ள வீட்டில் வைத்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை ராஜூ ரகசியமாக இருந்து வீடியோ எடுத்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில், அந்த வீடியோவை அர்ச்சகரிடம் காண்பித்து பவ்யாவும், ராஜூவும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அதாவது, ‘ஹனிடிராப்’ முறையில் அர்ச்சகருடன் பவ்யா உல்லாசமாக இருந்து அதனை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாகவும் அவர்கள் மிரட்டி உள்ளனர். 

இதனால் பயந்த அந்த அர்ச்சகர் அவர்கள் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். உல்லாச வீடியோவை காண்பித்து அர்ச்சகரிடம் இருந்து ரூ.49 லட்சம் வரை பவ்யாவும், ராஜூவும் பறித்துள்ளனர். 

தம்பதி கைது

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவர்களின் தொல்லை அதிகமாக சென்றதால், இதுதொடர்பாக புகார் கொடுக்க அர்ச்சகர் முடிவு செய்தார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்து மங்களூரு புறநகர் போலீசில் அர்ச்சகர் புகார் கொடுத்தார். இதுபற்றி அறிந்ததும் பவ்யாவும், ராஜூவும் தலைமறைவானார்கள். இந்த நிலையில் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் பிரசாத் தலைமையில் தம்பதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 

தனிப்படை போலீசார் அவர்கள் 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசார் பவ்யாவையும், அவருடைய கணவர் ராஜூவையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், ஒரு புதிய மோட்டார் சைக்கிள், ரூ.37 ஆயிரம் ரொக்கம், ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 2 தங்க மோதிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 

5 நாட்கள் போலீஸ் காவல்

பவ்யாவும், ராஜூவும் ‘ஹனிடிராப்’ முறையில் பலரை மிரட்டி பணம் பறித்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.10 லட்சத்துக்கு வீடு ஒன்றில் ஒத்திக்கு குடியிருந்ததும் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story