ஆழ்கடல் விசைப்படகு கட்ட வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்


ஆழ்கடல் விசைப்படகு கட்ட வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 22 Jan 2022 11:41 AM GMT (Updated: 22 Jan 2022 11:41 AM GMT)

நீலப்புரட்சி திட்டத்தில் ஆழ்கடல் விசைப்படகு கட்ட வாங்கிய வங்கி கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரி ராமேசுவரம் பகுதி ஆழ்கடல் மீனவர்கள் கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ராமநாதபுரம், 
நீலப்புரட்சி திட்டத்தில் ஆழ்கடல் விசைப்படகு கட்ட வாங்கிய வங்கி கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரி ராமேசுவரம் பகுதி ஆழ்கடல் மீனவர்கள் கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனு
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று ராமநாதபுரம் வந்தார். அவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தாலுகா ஆழ்கடல் மீன்பிடி மீனவர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகிகள் போஸ், சேசுராஜா, தேவதாஸ், எஸ்.பி. ராயப்பன் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 2017-ம் ஆண்டு நீலப் புரட்சி திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு, வங்கி கடன், பயனாளிகளின் பங்களிப்பு விளிம்பு தொகையுடன் ரூ.80 லட்சம் மதிப்பில் ஆழ்கடல் விசைப்படகு கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. 
ஆனால், படகு மட்டும் கட்டி முடிக்க ரூ.82.25 லட்சம் செலவானது. இதற்கு ரூ.4.15 லட்சம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு உள்ளது. 6 ஆயிரம் கிலோ வலை வாங்க ரூ.30 லட்சம், ஓராண்டுக்கான காப்பீடு ரூ.90 ஆயிரம், படகிற்கு தேவையான இதர பொருட்கள் வாங்க ரூ.3 லட்சம் என ரூ.1 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் என ஏற்கனவே உள்ள திட்ட மதிப்பீட்டு தொகையை விட ரூ.40.30 லட்சம் கூடுதல் செலவானது. 
திட்ட மதிப்பு
திட்ட மதிப்பு படி பயனாளியின் பங்களிப்பு தொகை ரூ.8 லட்சம், வங்கி கடன் ரூ.16 லட்சம், படகை கட்டி முடிக்க கூடுதல் செலவு ரூ.40.30 லட்சம், படகை தொழிலுக்கு அனுப்ப டீசல், ஐஸ், ரேஷன் பொருட்கள் என ரூ.2.50 லட்சம் உள்பட படகு உரிமையாளரின் கடன் சுமை ரூ.8 லட்சத்திற்கு பதிலாக ரூ.66.80 லட்சமாக அதிகரித்தது. 
ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு திட்டம் தொடங்கும்போது இந்த திட்டத்தில் பயனாளியாக சேர ரூ.8 லட்சம் மட்டும் பங்களிப்பு தொகை செலுத்தினால் போதும் என நம்பிக்கை வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதனை நம்பிய இழுவை படகு உரிமையாளர்கள் தங்கள் படகை உடைத்து ஆழ்கடல் விடைப்படகு கட்ட சம்மதம் தெரிவித்தனர். ஆனால், கட்டி முடித்த படகை தொழிலுக்கு அனுப்புவதற்குள் படகு உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.66.80 லட்சம் கடன் சுமை ஏற்பட்டுஉள்ளது.
செலவு கூடுகிறது
 இவ்வளவு தொகை செலவழித்து ஆழ்கடல் விசைப்படகில் தொழில் செய்ய தேவையான கடற்பரப்போ, துறைமுகமோ ராமேசுவரம் பகுதியில் இல்லை. வெளி மாவட்டங்களுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ படகுகளை கொண்டு சென்று தொழில் செய்ய செலவு கூடுதலாகிறது. டீசல் விற்கும் விலையில் தினமும் 3 ஆயிரம் லிட்டர் டீசல் செலவாகும் நிலை கட்டுபடியாகவில்லை. 
ஆழ்கடல் மீன்கள் அடிக்கடி விலை வீழ்ச்சி ஏற்படுவதால் இவ்வளவு செலவழித்து செல்லும் இந்த நீலப்புரட்சி திட்டம் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு முற்றிலும் பயனற்ற திட்டமாகும். இதனால் படகுகளை தொழிலுக்கு அனுப்ப முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஉள்ளோம். எனவே, எங்களின் ஆழ்கடல் மீன்பிடி படகு கடன் சுமையில் இருந்து விடுபட ஆழ்கடல் விசைப்படகு கட்ட வாங்கிய வங்கி கடனை முற்றிலும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
தீர்மானம்
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப் பட்டு சேதமான விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து ராமேசுரத்தில் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Next Story