தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 22 Jan 2022 4:28 PM GMT (Updated: 22 Jan 2022 4:28 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பொதுகழிவறை பயன்பாட்டிற்கு வருமா?
அரியலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சிக்குட்பட்ட  கீழக்கணவாய்  முல்லைநகர் கிழக்கு பகுதியில்  ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காக பொதுகழிவறை கட்டப்பட்டது. ஆனால் இதுநாள் வரை பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். இதனால் பாட்டில்கள், குப்பைகள் அங்கு ஏராளமாக கிடக்கிறது. எனவே உடனடியாக பொதுகழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கீழக்கணவாய், அரியலூர்.

குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்
பெரம்பலூர் நகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மாதவி சாலை தில்லை நகர் பகுதியில் காவேரி குடிநீர் செல்லும் குழாய் உடைந்து ஒரு மாதம் ஆகிறது. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக உடைந்த குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரம்பலூர்.

ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் பஞ்சாயத்து நெருஞ்சிப்பேட்டை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நெருஞ்சிப்பேட்டை, அரியலூர்.

சாலையின் நடுவே மெகா பள்ளம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா ஜெயம்கொண்டம் காமராஜபுரம் தெரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் சாலையில் மெகா பள்ளம் ஏற்பட்டது. தற்போது வரை இந்த பள்ளம் சரிசெய்யப்படவில்லை. இந்த சாலை வடக்கு பகுதியில் உள்ள 3 மிகப்பெரிய தெருக்களையும், விருத்தாச்சலம் செல்லும் சாலையில் இணைகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மெகா பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யோகேஸ்வரன், ஜெயங்கொண்டம், அரியலூர்.

பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரத்திலிருந்து காகித ஆலை செல்லும் சாலையில் அதியமான்கோட்டை பிரிவு எதிரே அப்பகுதி பயணிகளின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. தற்போது பயணிகள் நிழற்குடையின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சுகள் உடைந்துள்ளது. மேலும், அங்குள்ள இருக்கைகளும் உடைந்து கிடக்கிறது. இதனால் பயணிகள் அமர்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகளின் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கரூர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்
கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள பேக்கரிகள், ஓட்டல்கள், டீ, மளிகை, துணி, காய்கறி கடைகளில் சேகரிக்கப்படும் உபயோகம் அற்ற குப்பைகள்  ஈரோடு -கரூர் நெடுஞ்சாலை ஓரத்தில் ஏராளமாக கொட்டப்பட்டு வருகிறது. அதேபோல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளையும், வீடுகளில் உள்ள குப்பைகளையும் சிலர் வந்து கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கரூர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி 13-வது வார்டு கணக்கர் தெரு பகுதியில் ஏராளமான குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட கறம்பக்குடி பேரூராட்சி அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ள வேண்டும்.
பொதுமக்கள், கறம்பக்குடி, புதுக்கோட்டை.

பஸ் வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியிலிருந்து அம்புக்கோவில், கந்தர்வக்கோட்டை வழியாக திருச்சிக்கு தினமும் அரசு பஸ் காலை 6.30 மணிக்கு இயக்கப்பட்டது. தற்போது இந்த அரசு பஸ் வருவதில்லை. இதனால் மேற்கண்ட பகுதி பொதுமக்கள் திருச்சிக்கு செல்ல புதுகோட்டைக்கு வந்து மற்றொரு பஸ் மூலம் சென்று வருகின்றனர். இதனால் காலநேரமும், செலவும் ஏற்படுகிறது. எனவே அரசு பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கலிபுல்லா சுல்தான், கறம்பக்குடி, புதுக்கோட்டை.

கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா மேலப்பட்டி அண்ணாநகர் மேட்டுப்பட்டி செல்லும் சாலையில் முறையான கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், இலுப்பூர், புதுக்கோட்டை.

Next Story