கெலமங்கலம் அருகே பயங்கரம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை-நண்பர்கள் கைது


கெலமங்கலம் அருகே பயங்கரம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை-நண்பர்கள் கைது
x
தினத்தந்தி 22 Jan 2022 4:49 PM GMT (Updated: 2022-01-22T22:19:23+05:30)

கெலமங்கலம் அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராயக்கோட்டை:
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள எச்.செட்டிப்பள்ளி ஊராட்சி கூட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனப்பா. இவருடைய மகன் பழனி (வயது 26). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் முனிராஜூ மகன் சாமி (19), மாதேஷ் மகன் விஜய் (23). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.
பழனி, சாமி, விஜய் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள அரசு பள்ளி பின்புறம் உள்ள சுடுகாட்டு பகுதியில் மது அருந்தினர். போதை தலைக்கேறிய நிலையில் பழனிக்கும், சாமி, விஜய்க்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.
தலையில் கல்லை போட்டு கொலை
இந்தநிலையில் ஆத்திரமடைந்த சாமி, பழனியை கீழே தள்ளி அங்கிருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டார். விஜய் மீண்டும் அதே கல்லை எடுத்து பழனியின் நெஞ்சில் போட்டார். இதில் பலத்த காயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து சாமி, விஜய் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பழனி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் கெலமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
2 பேர் கைது
அதன்பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், கார்த்திகேயன் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பழனி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சாமி, விஜயை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பழனியை கொலை செய்ததை ஒப்பு கொண்டனர். பின்னர் போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
கெலமங்கலம் அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story