நாகையில், சம்பா அறுவடை பணி தொடங்கியது


நாகையில், சம்பா அறுவடை பணி தொடங்கியது
x
தினத்தந்தி 22 Jan 2022 5:58 PM GMT (Updated: 2022-01-22T23:28:01+05:30)

நாகையில் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கியது. கூடுதலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர

நாகப்பட்டினம்:
நாகையில் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கியது.  கூடுதலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை  திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முப்போக சாகுபடி
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இங்கு சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். 
 காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கடந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்து பாதிக்கப்பட்டன.பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
நெல் அறுவடை பணி தொடங்கியது
மழையில் இருந்து தப்பிய நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. செல்லூர், பாலையூர், புலியூர், பெருங்கடம்பனூர், ஆழியூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. 
எந்திரம் மூலம் அறுவடை  பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  எந்திரம் செல்ல முடியாத இடங்களில் ெதாழிலாளர்கள் மூலம்  அறுவடை செய்யப்பட்டு நெல்மணிகளை சாலையில் கொட்டி தூற்றும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை பணி தொடங்கி விட்டதால் கூடுதலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கடைமடை விவசாய சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
கூடுதலாக கொள்முதல் நிலையங்கள் 
நாகை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் தற்போது எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தாளடி பயிர்கள் இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் தற்போது குறைந்த அளவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்  திறக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் காத்துக்கிடக்கின்றனர். தற்போது மழை பெய்தால் நெல் மணிகள் நனைந்து பாதிக்கப்படும். 
எனவே கூடுதலாக  அரசு நேரடி  கொள்முதல் நிலையங்களை திறந்து உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் காலதாமதமின்றி வரவு வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 வாய்க்காலை தூர்வார வேண்டும்
தமிழக காவிரி விவசாயிகள் சங்க அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-
வட கிழக்கு பருவ மழை காரணமாக இளம் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. இதையடுத்து மீண்டும் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு தற்போது தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து அடுத்த மாதம் 10-ந்தேதி வரை தண்ணீர் திறந்து விடவேண்டும்.
 மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மழைநீரில் பயிர்கள் மூழ்குவதை தடுக்க கோடை காலத்திலேயே அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story