மாணவன் மர்மச்சாவு


மாணவன் மர்மச்சாவு
x
தினத்தந்தி 22 Jan 2022 7:01 PM GMT (Updated: 2022-01-23T00:31:01+05:30)

மாணவன் மர்மச்சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர்,
வீட்டுக்குள் 7-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவன்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வருபவர் விஜய்நாயகம். இவருடைய மனைவி சுரேகா. இவர்களது மகன் சிவபிரசாத் (வயது 13). ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று காலையில் விஜய்நாயகம் வழக்கம் போல அலுவலகத்துக்கு பணிக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி சுரேகா வீட்டு மாடியில் துணி காயப்போட சென்றார்.
அப்போது வீட்டின் உள்ளே சிவபிரசாத் இருந்தான். இதற்கிடையே சுரேகா துணி காயப்போட்டு விட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்து பார்த்த போது சிவபிரசாத் சுவரில் உள்ள ஆணியில், கழுத்தில் கயிற்றால் சுற்றப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான்.
மர்மமான முறையில்
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேகா அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மாணவன் மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் அதிகாரிகளும் வந்து வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story