காதல் விவகாரத்தில் கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை


காதல் விவகாரத்தில் கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 Jan 2022 7:56 PM GMT (Updated: 2022-01-23T01:26:18+05:30)

பணகுடி அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணகுடி:
பணகுடி அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்காலிக பேராசிரியை
நெல்லை மாவட்டம் பணகுடி மேரிபாத்திமா தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியம். இவருடைய மகள் மரிய கென்ஸ்லின் (வயது 27). 
முதுநிலை பட்டதாரியான இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியையாக பணியாற்றி வந்தார். மரிய கென்ஸ்லின் கடந்த சில நாட்களாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசாமல் இருந்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மரிய கென்ஸ்லின் தனது அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் மரிய கென்ஸ்லின் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து உடனடியாக பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மரிய கென்ஸ்லின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

காரணம் என்ன?
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, மரிய கென்ஸ்லின் அஞ்சுகிராமத்தில் உள்ள தனது உறவுக்கார வாலிபரை காதலித்து வந்தார். ஆனால், இந்த காதலுக்கு அந்த வாலிபரின் குடும்பத்தினர் உறவுமுறையை காரணம் காட்டி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த மரிய கென்ஸ்லின் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும் இதுதான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீசில் மரிய கென்ஸ்லின் தம்பி சூசை கென்சன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 
பணகுடி அருகே கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story