ஈரோட்டில் ரூ.5¾ கோடி மதிப்பீட்டில் 2 பொது சுகாதார ஆய்வகங்கள்- 15 நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணி; அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்


ஈரோட்டில் ரூ.5¾ கோடி மதிப்பீட்டில் 2 பொது சுகாதார ஆய்வகங்கள்- 15 நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணி; அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Jan 2022 9:52 PM GMT (Updated: 22 Jan 2022 9:52 PM GMT)

ஈரோட்டில் ரூ.5¾ கோடி மதிப்பீட்டில் 2 பொது சுகாதார ஆய்வகங்கள் - 15 நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணியினை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு
ஈரோட்டில் ரூ.5¾ கோடி மதிப்பீட்டில் 2 பொது சுகாதார ஆய்வகங்கள் - 15 நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணியினை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
சுகாதார ஆய்வகங்கள்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், தேசிய நகர்ப்புற திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சியில் ரூ.5 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் 2 மாநகர பொது சுகாதார ஆய்வகம் உட்பட 15 நகர்புற நலவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா ஈரோடு திரு.வி.க. ரோட்டில் உள்ள சூரம்பட்டி போலீஸ் நிலையம் அருகில் நேற்று நடந்தது.
இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி எம்.பி., திருமகன் ஈவெரா எம்.எம்.ஏ., தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள். வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு, 2 மாநகர பொது சுகாதார ஆய்வகம் உட்பட 15 நகர்புற நலவாழ்வு மையம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
நகர்புற நலவாழ்வு மையம்
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தேசிய நகர்ப்புற திட்டத்தின் கீழ் 20 நகர்புற நல வாழ்வு மையமும், 2 மாநகர பொது சுகாதார ஆய்வகமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 15 நகர்புற நலவாழ்வு மையங்கள் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.5 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் 2 மாநகர பொது சுகாதார ஆய்வகங்கள் தலா ரூ.22 லட்சம் வீதம் ரூ.44 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட உள்ளது.
இதன்மூலம் பொதுமக்களுக்கு நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழ்நிலை இருக்கிறது. ஆங்காங்கே சிறிய அளவிலே மக்கள் வந்து செல்கின்ற இடத்தில் அவர்களுக்கு மிக அருகாமையில் பயன்படுகின்ற ஒரு திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 6 மாத காலத்திற்குள் இந்த திட்டத்தினை முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று (அதாவது நேற்று) பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
தார் சாலை அமைக்கும் பணி
இதில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவமனை பணியாளர் ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். மேலும், ஈரோடு மாநகராட்சியில் 15-வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 202 சாலைப்பணிகளும், 11 கழிப்பிட பராமரிப்பு ரூ.40 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு கல்யாணசுந்தரம் வீதியில் ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்தார்.
இதில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.பி.ரவி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story