ஈரோட்டில் துணிகரம்: ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை திருடிச்சென்ற வாலிபர்


ஈரோட்டில் துணிகரம்: ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை திருடிச்சென்ற வாலிபர்
x
தினத்தந்தி 22 Jan 2022 9:53 PM GMT (Updated: 2022-01-23T03:23:09+05:30)

ஈரோட்டில் ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை துணிகரமாக திருடிச் சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு
ஈரோட்டில் ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை துணிகரமாக திருடிச் சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். திருட்டு
ரெயில்வே அதிகாரி
ஈரோடு வீரப்பம்பாளையம் செங்காடு செல்வம் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார் திண்டலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரிடம், தான் ரெயில்வே துறையில் உயர் அதிகாரியாக வேலை பார்த்து வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து செந்தில்குமார் தனது ஆட்டோவில் அந்த வாலிபரை ஏற்றிக்கொண்டு ரெயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வீரப்பம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சென்று கொண்டிருந்த போது அந்த வாலிபர் திடீரென ஆட்டோவை நிறுத்த சொன்னார். அதனால் செந்தில் குமார் ஆட்டோவை நிறுத்தி உள்ளார்.
ஆட்டோ திருட்டு
பின்னர் அந்த வாலிபர் தனக்கு மது வாங்கி தாருங்கள் என்று கூறி ரூ.150-யை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை செந்தில்குமார் வாங்கிக்கொண்டு மது வாங்க டாஸ்மாக் கடைக்கு சென்றார். பின்னர் மதுவை வாங்கி கொண்டு திரும்பி வந்தபோது ஆட்டோ காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் மது வாங்க சென்ற நேரத்தில் அந்த வாலிபர் ஆட்டோவை திருடி சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செந்தில்குமார் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவைத் திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story