ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் ஊற்றி மதுபாட்டில்கள் எரிப்பு- 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை


ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் ஊற்றி மதுபாட்டில்கள் எரிப்பு- 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Jan 2022 9:54 PM GMT (Updated: 2022-01-23T03:24:28+05:30)

ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் ஊற்றி மது பாட்டில்களை எரித்ததாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஈரோடு
ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் ஊற்றி மது பாட்டில்களை எரித்ததாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
டாஸ்மாக் கடை
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 300 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் தினமும் காலை முதல் இரவு வரை செயல்படும். ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் இந்த டாஸ்மாக் கடைகளுக்கு வந்து மது வகைகளை வாங்கிச்சென்று சாலையோரங்கள், வாய்க்கால் கரைகள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உட்கார்ந்து குடிக்கிறார்கள். பின்னர், மதுபாட்டில்களை சாலையில்போட்டு உடைத்துவிட்டோ, வாய்க்கால்களில் போட்டு உடைத்து விட்டோ அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்கள். மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்று விபத்துக்குள்ளாவது, ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக்கொள்வது ஆகிய நிகழ்வுகளும் நடைபெறும்.
பலர் மதுக்குடித்த இடத்திலேயே மட்டையாகி விடுவதும், சிலர் கழிவுகளோடு கழிவாக படுத்து உறங்குவதும், சாலை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையிலேயே விழுந்து கிடப்பதும் அன்றாட நிகழ்வுகளாக உள்ளன.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் சட்டையை கழற்றி முகமூடியாக கட்டி இருந்தார். முகக்கவசம் அணிந்திருந்தவர் கடையின் முன்பு வந்ததும் கையில் கொண்டு வந்திருந்த ஒரு பாட்டிலில் இருந்து பெட்ரோலை கடையின் ஷட்டரை ஒட்டி கடைக்குள் ஊற்றினார். உடன் வந்தவர் உடனடியாக ஒரு தீக்குச்சியை உரசி அதில் போட்டார். பெட்ரோல் குப்பென்று பற்றிக்கொண்டு கொளுந்து விட்டு எரிந்தது. பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்றுக்காலை வழக்கம்போல கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது ஷட்டர் பகுதி எரிந்த நிலையில் காணப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது 9 அட்டை பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்கள் எரிந்து கிடந்தன. மொத்தம் 9 பெட்டிகளில் இருந்த 180 மி.லி பாட்டில்கள் 432 மற்றும் 360 மி.லி. மதுபாட்டில்கள் 11-ம் எரிந்து கரிக்கட்டையாக கிடந்தன.
போலீஸ் விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அவர்கள் சம்பவம் குறித்து விசாரித்தனர். அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்த்தபோது, 2 வாலிபர்கள் வந்து கடைக்கு தீவைத்த விவரம் போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து டாஸ்மாக் கடையில் தீவைத்த நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
2 பேர் பிடிபட்டனர்
இந்தநிலையில் சந்தேகத்துக்கு உரிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் கூறும்போது, நள்ளிரவில் மதுபோதையில் யாராவது இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கலாம். ஷட்டர் பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்ததால், ஷட்டரை ஒட்டி இருந்த மதுபாட்டில்கள் மட்டும் எரிந்து உள்ளன. சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்பில் மது எரிந்து உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யாரையும் அடையாளம் காணவில்லை என்றார்.

Next Story