‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Jan 2022 10:08 PM GMT (Updated: 22 Jan 2022 10:08 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

உடனடி நடவடிக்கை 

சேலம் கோரிமேடு சின்னக்கொல்லப்பட்டி ஏற்காடு சாலையில் உள்ள 2 குப்பை தொட்டிகளும் நிரம்பி குப்பைகள் சாலையில் சிதறிக் கிடந்தன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்தனர். அந்த பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை நேற்று உடனடியாக அகற்றினர். குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறோம்.
-ஊர்மக்கள், சின்னக்கொல்லப்பட்டி, சேலம்.
===
வீணாகும் குடிநீர்

தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் பன்னிகுளம் ஊராட்சிக்குட்பட்ட எருமைகாரன்கொட்டாய் பஸ் நிறுத்தம் அருகில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாகி சாலையில் ஓடுகிறது. இதுமட்டுமல்லாமல் தொடர்ந்து குடிநீர் வெளியேறுவதால் அந்த சாலை சேதம் அடையும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குமரவேல், எருமைகாரன்கொட்டாய், தர்மபுரி.
===
லாரிகளால் ஏற்படும் விபத்துகள்

கிருஷ்ணகிரி நகருக்குள் வரக்கூடிய சாலையில் சுங்கச்சாவடி அருகில் ஏராளமான லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இவ்வாறு லாரிகள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சுங்கச்சாவடி அருகில் சாலையோரங்களில் லாரிகளை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயக்குமார், கிருஷ்ணகிரி.
===
கழிப்பிடம் கட்டப்படுமா?

நாமக்கல் மாவட்டம் ரெட்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கூலிப்பட்டி பகுதியில் பொதுக்கழிப்பிடம் இல்லாததால் அந்த பகுதி மக்கள் திறந்த வெளியில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அந்த வழியே செல்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி பொதுக்கழிப்பிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்மக்கள், கூலிப்பட்டி, நாமக்கல்.
===
சாக்கடை கால்வாயில் அடைப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா காமலாபுரம் ஏர்போர்ட் புது காலனி நுழைவு வாயில் முன்பு சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், அந்த பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகுகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி, சாக்கடை கால்வாயில் முறையாக கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்மக்கள், காமலாபுரம், சேலம்.
-===
சாலை சீரமைக்கப்படுமா?

சேலம் திருவாக்கவுண்டனூர் 24-வது வார்டு, மேத்தா நகரில் தார் சாலை அமைத்து பல ஆண்டுகளாகிறது.இந்த சாலை முறையாக பராமரிக்கப்படாததால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமாக காட்சி அளிக்கிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஜல்லிக்கற்கள் பெயர்ந்த இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?
-ஊர்மக்கள், மேத்தா நகர், சேலம்.
===
நடவடிக்கை எடுப்பார்களா?

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் புங்கவாடி ஊராட்சியில் குப்பைகளோடு குப்பை வண்டியும் தலைகீழாக கிடக்கிறது. பல மாதங்களாக இப்படி கிடப்பதால் இதுபற்றி புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்மக்கள், புங்கவாடி, சேலம்.
===
வேகத்தடை வேண்டும்

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா ஜலகண்டாபுரம்-எடப்பாடி மாணிக்கம்பட்டி செல்லும் சாலையில் காட்டுபாளையம் பஸ் நிறுத்தத்தில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி வேகத்தடை மற்றும் பிரதிபலிப்பான்கன் அமைத்து தர வேண்டும் என்பது இந்த ஊர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?
-எஸ்.இளங்கோ, இருப்பாளி, சேலம்.
==
சுகாதார சீர்கேடு

சேலம் மாவட்டம் மேட்டூர்-கொளத்தூர் சாலை மாசிலாபாளையம் பகுதியில் மின்கம்பம் அருகே குப்பைகளை கொட்டி சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். குப்பைகளை எரிக்காமல் எடுத்துச் செல்ல சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
ஊர்மக்கள், மாசிலாபாளையம், சேலம்.
==

Next Story