திருவள்ளூர் அருகே ரூ.9½ லட்சம் மோசடி; வாலிபர் கைது


திருவள்ளூர் அருகே ரூ.9½ லட்சம் மோசடி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2022 1:07 PM GMT (Updated: 2022-01-23T18:42:15+05:30)

திருவள்ளூர் அருகே டெலிகிராம் மூலம் குறைந்த பணம் செலுத்தினால் அதிக பணம் தருவதாக ரூ.9½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

டெலிகிராம் மூலம் பழக்கம்

திருவள்ளூர் மாவட்டம் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (வயது 25). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், ஒன்னுபுரம் கிராமத்தை சேர்ந்த சரவணன் (33) என்பவருடன் டெலிகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் மூலம் சரவணன் தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிறுவனத்தில் ரூ.200 முதலீடு செய்தால் ரூ.400 தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதை தொடர்ந்து குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் என்ற ஆசையில் கோகுல் முதலில் கடந்த 5-ந் தேதியன்று சரவணன் தெரிவித்த வங்கி கணக்குக்கு ரூ.200-ஐஅனுப்பினார்.

அதிக பணம் சம்பாதிக்க

அவர் பணம் அனுப்பிய சிறிது நேரத்தில் ரூ.400 இவரது வங்கி கணக்குக்கு வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கோகுல் மேலும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை செலுத்த தொடங்கினார். அவர் செலுத்திய பணம் இரட்டிப்பாக வரவே ஒரு கட்டத்தில் அவர் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் செலுத்தினார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சரவணன் இங்கு நெட்வொர்க் கிடைக்கவில்லை, அதனால் பணம் செலுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்.

சிறையில் அடைப்பு

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கோகுல், சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூரில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து சரவணன் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் பிரபாகர் தாஸர் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் ஒன்னுபுரம் பகுதிக்குச் சென்று அங்கு பதுங்கியிருந்த சரவணனை கைது செய்து திருவள்ளூர் அழைத்து வந்தனர்.

பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story