நாமக்கல் மாவட்டத்தில், முழு ஊரடங்கையொட்டி சாலைகள் வெறிச்சோடின; பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்


நாமக்கல் மாவட்டத்தில், முழு ஊரடங்கையொட்டி சாலைகள் வெறிச்சோடின; பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்
x
தினத்தந்தி 23 Jan 2022 5:02 PM GMT (Updated: 23 Jan 2022 5:02 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

நாமக்கல், ஜன.24-
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று 3-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையொட்டி பொது போக்குவரத்து இருக்காது என அறிவிக்கப்பட்டு இருந்ததால், அனைத்து பஸ்களும் டெப்போக்களிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் ஆட்டோ, கார், லாரி உள்ளிட்ட வாகனங்களும் மிக குறைவான அளவிலேயே இயக்கப்பட்டன. இதனால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
நாமக்கல் நகரை பொறுத்த வரையில் பிரதான சாலை, திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை, மோகனூர் சாலை, சேந்தமங்கலம் சாலை என நகர் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதியும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. அரசின் உத்தரவுபடி நகர் முழுவதும் மதுபான கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
லாரிகள் நிறுத்தம்
லாரி பட்டறைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தது. மருந்து கடைகள், ஆவின் பாலகம், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஏ.டி.எம். மையங்கள் மட்டுமே திறந்து இருந்தன. இவற்றிலும் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஓட்டல்களை பொறுத்த வரையில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கினர்.
முழு ஊரடங்கையொட்டி போதிய லோடு கிடைக்காத காரணத்தால் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் ஏராளமான லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்ததால் பாரத்தை இறக்க முடியாமல் சில லாரிகள் லோடுடன் நிற்பதை பார்க்க முடிந்தது.
அபராதம்
நகர் முழுவதும் போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களிடம் எங்கு செல்கிறீர்கள் என விசாரித்து அனுப்பி வைத்தனர். அழைப்பிதழுடன் வந்த நபர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டனர். இருப்பினும் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர். முககவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
முழு ஊரடங்கையொட்டி இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் காலை 6 மணி வரை இறைச்சி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதை காணமுடிந்தது.
இதேபோல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பரமத்திவேலூர், மோகனூர், குமாரபாளையம், பள்ளிபாளையம், ராசிபுரம் உள்ளிட்ட பகுதியிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

Next Story