தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Jan 2022 5:14 PM GMT (Updated: 23 Jan 2022 5:14 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

கழிவுகள் அகற்றப்படுமா?
வேதநகர் வழியாக கோட்டார் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் கடந்த மாதம் தூர்வாரப்பட்டு கழிவுகள், மண் என அனைத்தும் அருகில் கொட்டப்பட்டது. ஒரு மாதம் கடந்த பிறகும் அவை அகற்றப்படவில்லை. மலைபோல் கிடக்கும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?          
                       -ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
சுசீந்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழத்தெருவில் எஸ்.டி.பி.153 எண் கொண்ட மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து அதன் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் மக்கள் பெரும் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                           -ஆர்.குமார், சுசீந்திரம்.
சீரான குடிநீர் தேவை
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட புன்னைநகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சீரமைப்பு பணிக்காக சாலை தோண்டப்பட்டள்ளது. இதனால், கடந்த 10 நாட்களாக அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யவும், சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. 
                                       -அய்யப்பன், புன்னை நகர்.
விபத்து அபாயம்
கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட முண்டவிளையில் இருந்து செம்பருத்திவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மாறாங்கோணம் பகுதியில் 3 இலவ மரங்கள் சாலையில் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் மக்கள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                   -அருள்தாஸ், மாறாங்கோணம்.
கால்வாயை தூர்வார வேண்டும்
பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் திக்கணங்கோடு கால்வாய் வழியாக செம்பொன்விளை, ஓலக்கோடு, முக்காடு, கறுக்கன்குழி ஆகிய கிராமங்களுக்கு செல்கிறது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. தற்போது, இந்த கால்வாயில் செடிகள், புற்கள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளதால் கடைவரம்பு வரை தண்ணீர் ெசல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை அக்கிரமித்துள்ள செடிகள், புற்களை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                           -ஸ்டீபன் டேவிட், செம்பொன்விளை.
மின்விளக்கின் அவல நிலை
கன்னியாகுமரி முருகன்குன்றம் சுனாமி காலனியில் சவேரியார் புரம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் விளக்கு சேதமடைந்து எரியாமல் பொருத்தப்பட்ட நிலையில் இருந்து விடுபட்டு கீழே தொங்கியபடி காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் விளக்கு கீழே விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்கை மாற்றி புதிய விளக்கை பொருத்தி எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                -என்.உதயகுமார், சுனாமி காலனி, 
கன்னியாகுமரி.

Next Story