திருவண்ணாமலை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்


திருவண்ணாமலை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 23 Jan 2022 5:38 PM GMT (Updated: 2022-01-23T23:08:57+05:30)

திருவண்ணாமலை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வாகனங்களில் சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வாகனங்களில் சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, 3-வது வாரமாக முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. பஸ்கள் இயக்கப்படாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. 

மேலும் அனைத்து வாகன போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின. அதேபோல் கிரிவலப்பாதையும் வெறிச்சோடி காணப்பட்டது. 

முக்கிய பகுதிகளில் தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை நகரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையிலான போலீசார் முகக்கவசம், ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

 போலீசார் வேதனை

மேலும் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். யாரை கேட்டாலும் மருத்துவமனைக்கு செல்கிறோம், சாவு வீட்டிற்கு செல்கிறோம், திருமணத்திற்கு செல்கிறோம் என்று சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிள்களில் வெளியே செல்கின்றனர். அவர்களை தடுக்க முடியவில்லை என்று போலீசார் வேதனையாக தெரிவித்தனர். 

மக்களின் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றும் வகையில் பால், மருந்துக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மட்டும் செயல்பட்டன. ஓட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. 

 அருணாசலேஸ்வரர் கோவில்

நேற்று முகூர்த்த நாள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த 3 திருமணங்கள் மட்டும் நடைபெற்றது. 

அப்போது திருமண ஜோடிகளுடன் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று காலையில் கோவில் முன்பு மக்கள் கூட்டம் காணப்பட்டது.

வேட்டவலம்

வேட்டவலம் பேரூராட்சியில் ஊரடங்கு காரணமாக காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு இருந்தன. 

எப்போது பரபரப்பாக காணப்படும் கடை‌வீதி, திருக்கோவிலூர் ரோடு பகுதியில் வாகன போக்குவரத்து இன்றியும், பொதுமக்கள் நடமாட்டமின்றியும் வெறிச்சோடி காணப்பட்டது. 

போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி வெளியே சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

 கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளிகடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. 

வாகன போக்குவரத்து இன்றி சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய சாலைகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

 ஆரணி

ஆரணி நகரின் முக்கிய சாலைகளான காந்திரோடு, மார்க்கெட் ரோடு, பெரியகடைவீதி, மண்டிவீதி, அருணகிரி சத்திரம், சைதாப்பேட்டை, ஷாரப்பஜார், பழைய, புதிய பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றியும், வாகன போக்குவரத்து இன்றியும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

கனரக வாகனங்கள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக போலீசார் நகர எல்லை பகுதியிலேயே மாற்றி அமைத்து வாகனங்களை திருப்பி அனுப்பினர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.

 சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், முருகன் மற்றும் போலீசார் நான்கு வழி சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் வித்தனர். சேத்துப்பட்டு செஞ்சி சாலை, வந்தவாசி சாலை, ஆரணி சாலை, போளூர் சாலையில் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.

 பெரணமல்லூர்

பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி மற்றும் போலீசார் கொழப்பலூர், சட்டதாங்கல் கூட்ரோடு, இஞ்சிமேடு கூட்ரோடு, அஸ்தினாபுரம் சாலை ஆகிய இடங்களில் போலீசார் ரோந்து சென்றனர். 

அப்போது அத்தியாவசிய தேவையின்றி சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. 

தேவிகாபுரம், தேசூர் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. 

 கண்ணமங்கலம்

கண்ணமங்கலம், சந்தவாசல் பகுதியில் கடைகள் மூடப்பட்டு இருந்தன. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது தேவையின்றி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்தும், முகக்கவசமின்றி சொல்வோருக்கு அபராதமும் விதித்தனர். 

எப்போதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கண்ணமங்கலம் புதிய சாலை ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய காணப்பட்டது. 

வந்தவாசி

வந்தவாசி பஜார் வீதி, காந்தி சாலை, ஆரணி சாலை, தேரடி பகுதி, திண்டிவனம் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது. பால் மற்றும் மருந்து கடை, பெட்ரோல் பங்க் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. 

போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் வந்தவா்களை பிடித்து அறிவுரை வழங்கி, எச்சரித்து அனுப்பினர். 

 செங்கம்

செங்கம் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. செங்கம் பழைய காவல் நிலையம் அருகே உள்ள காய்கறி கடைகள், உழவர் சந்தை உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. 

செங்கத்தில் குப்பநத்தம்-போளூர் சாலை கூட்ரோடு, ராஜவீதி, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம் போல காலை நேரத்தில் பொதுமக்கள் ஆங்காங்கே சாலையில் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

Next Story