உலகளந்தபெருமாள் கோவில் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?


உலகளந்தபெருமாள் கோவில் தெப்பக்குளம்  சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 23 Jan 2022 5:45 PM GMT (Updated: 23 Jan 2022 5:45 PM GMT)

திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருக்கோவிலூர், 

 திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் தெப்பக் குளம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது, தெப்ப குளத்தில் தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். இவ்வளவு சிறப்புமிக்க இந்த தெப்பகுளம் தற்போது முட்புதர்கள்  வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. தண்ணீர் நிரம்பி இருக்க வேண்டிய இந்த குளம் முட் செடிகளும், புதர்களும் மண்டிக்கிடப்பதோடு, அப்பகுதி மக்களின் குப்பை கொட்டும் குப்பை தொட்டி போல காட்சியளிக்கிறது. மேலும் நீர்வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு காரணமாக தெப்பகுளத்துக்கு தண்ணீர் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

கிடப்பில் போடப்பட்ட பணி

குறிப்பாக குளத்தின் நடுவே உள்ள வசந்த மண்டபமும் சிதிலமடைந்து போனது. இந்தநிலையில் திருக்கோவிலூர் நகர மக்கள் தெப்ப குளத்தை தூர்வாரியும், வசந்த மண்டபத்தை சீரமைத்தும் குளத்துக்கு மழைகாலங்களில் தண்ணீர் வர நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தை சீரமைக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகளும் தொடங்கின. ஆனால் அந்த பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது. 

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
உலகளந்தபெருமாள் கோவில் தெப்பக்குளம் செடி கொடிகளால் சூழப்பட்டு, படிக்கட்டுகள் உடைந்து சேதமடைந்து கிடக்கிறது. இந்த குளத்துக்கு பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் வர வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளதால் தண்ணீர் வருவது கிடையாது. ஆகவே பழமைவாய்ந்த தெப்பக்குளத்தை மாவட்ட நிர்வாகம் சீரமைத்து, பங்குனி தெப்ப உற்சவத்தை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே திருக்கோவிலூர் நகர பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story