உள்ளாட்சி தேர்தலுக்காக தான் ரூ.500 கோடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன-செல்லூர் ராஜூ பேட்டி


உள்ளாட்சி தேர்தலுக்காக தான் ரூ.500 கோடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன-செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2022 7:33 PM GMT (Updated: 2022-01-24T01:03:57+05:30)

உள்ளாட்சி தேர்தலுக்காக தான் ரூ.500 கோடி மதிப்பிலான திட்டங்கள் மதுரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை, 

உள்ளாட்சி தேர்தலுக்காக தான் ரூ.500 கோடி மதிப்பிலான திட்டங்கள் மதுரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோரிப்பாளையம் 

மதுரையில் குருவிக்காரன் சாலை மேம்பாலம் உள்பட ரூ.53 கோடி மதிப்பிலான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.அந்த குருவிக்காரன் சாலை மேம்பாலம் கட்டுவதற்கு நான் முயற்சி எடுத்து அதற்கு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்திருந்தார். அதே போல் ஓபுளாபடித்துறை பாலத்திற்கும் நிதி பெற்று தந்தேன். அந்த மேம்பால பணிகள் தற்போது நடந்து வருகிறது. கோரிப்பாளையம் மேம்பாலம் தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கோர்ட்டுக்கு சென்றதால் தான் அ.தி.மு.க. ஆட்சியில் அந்த மேம்பால பணிகள் தொடங்கவில்லை.
வைகை கரையின் இருபக்கமும் நான்கு வழி சாலை அமைக்கும் திட்டத்தை தொடங்கினோம். இந்த சாலை பெத்தானியபுரத்தில் இருந்து விரகனூர் ரிங் ரோடு வரை அமைக்கப்படுகிறது. தற்போது முதல்-அமைச்சர் மேலக்கால் சாலையை அகலப்படுத்துவதாக கூறியிருக்கிறார்.அந்த சாலையை அகலப்படுத்துவதற்கு பதில் பெத்தானியாபுரத்தில் இருந்து மேலக்கால் வரை வைகை ஆற்றுக்கரையில் விரைவு சாலை அமைக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.

தெப்பக்குளம்

இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மதுரை மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் தான் ரூ.5 ஆயிரம் கோடியில் பல்வேறு பணிகள் நடந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பஸ் நிலையம் கட்டிடம், அடுக்குமாடி வாகன காப்பகம் உள்பட ரூ.1000 கோடிக்கு பணிகள் நடந்தன. மதுரை-நத்தம் இடையே ரூ.1100 கோடிக்கு நான்குவழிச்சாலை பணிகள், கோவை கொடிசியா போல மதுரை தமுக்கத்தில் கலையரங்கம் கட்டும் பணிகள், கலெக்டர் அலுவலக வளாக கட்டிடம், பெரியார் ஆஸ்பத்திரி விரிவாக்க கட்டிடம் கட்டிடப்பட்டு நவீன கருவிகள் ரூ.50 கோடியில் வாங்கப்பட்டன. ரூ.147 கோடியில் மற்றொரு கட்டிடம் கட்டும் பணியினை தொடங்கினோம்.
மதுரையின் முக்கிய சாலைகளை விரிவுப்படுத்தி இருக்கிறோம். உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரை ரூ.200 கோடியில் நான்குவழிச்சாலை அமைத்து இருக்கிறோம். சமயநல்லூரியில் இருந்து பழங்காநத்தம் வரை சாலையை அகலப்படுத்தி இருக்கிறோம். ரூ.1296 கோடி செலவில் முல்லை பெரியாறு அணை குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தோம். பனையூர் கால்வாயை ரூ.1 கோடியில் சீரமைத்தோம். வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்தோம்.

தடுப்பணைகள்

கடந்த காலத்தில் மதுரையில் அதிகளவு குடிநீர் தட்டுப்பாடு இருந்தது. நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்தில் இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் செல்லூர், வண்டியூர், மாடக்குளம், முத்துப்பட்டி, தாரைப்பட்டி, துவரிமான், கொடிமங்கலம் உள்பட முக்கிய கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் சேமிக்கப்படுகிறது. வைகை ஆற்றின் குறுக்கே 3 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு தெப்பக்குளத்தில் எப்போதும் நீர் தேக்கப்பட்டு உள்ளது. அதனால் தற்போது மதுரை நகரில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உயர்ந்து உள்ளது. 
தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு ரூ.500 கோடியில் திட்டங்கள் அறிவித்து இருக்கிறார். ஆனால் இவை எந்த நிதியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து தான் மதுரைக்கு திட்டங்களை அறிவித்து இருக்கிறார். நான்கு வழிச்சாலையிலும் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் வேலு கூறியிருந்தார். ஆனால் அது குறித்து முதல்-அமைச்சர் அறிவிக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. நாங்கள் மக்கள் பக்கம் இருக்கிறோம். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story