கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின


கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 23 Jan 2022 7:46 PM GMT (Updated: 23 Jan 2022 7:46 PM GMT)

முழு ஊரடங்கினால் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடின.

விருதுநகர், 
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த 9 மற்றும் 16-ந் தேதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அந்தவகையில் இம்மாதத்தில் 3-வது முறையாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 
முழு ஊரடங்கு 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் முழு ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வீடுகளிலேயே முடங்கினர். ெரயில் நிலையங்களில் மட்டும் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. பெட்ரோல் பங்க்குகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் செயல்பட்டன.
 விருதுநகரில் நகராட்சி பணியாளர்கள் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் அனைத்து பகுதிகளிலும் மாதம் ஒருமுறை ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும் என்று அறிவித்திருந்த போதிலும் அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. நெடுந்தூர ெரயில்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. ெரயில்நிலைய ஆட்டோக்கள் இயங்கின. உணவகங்களில் அரசு அறிவுறுத்தியபடி பார்சல்கள் மட்டும் வழங்கப்பட்டன. சிறுபெட்டி கடைகளும், டீக்கடைகளும், சைக்கிள்டீ விற்பனையாளர்களும் செயல்படவில்லை. 
சிவகாசி 
பொது போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்காததால் சிவகாசி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். இதேபோல் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட், சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு, சாத்தூர் ரோடு ஆகிய பகுதிகள் மக்கள் நடமாட்டம் இ்ன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 
சிவகாசி மாநகராட்சி பகுதியில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதிக்காததால் மக்கள் கிராமப்பகுதிகளுக்கு சென்று இறைச்சி வாங்கி வந்தனர். சிவகாசி கிழக்கு பகுதியில் ஒவ்வொரு தெருவிலும் தள்ளுவண்டிகளில் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்றது. சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டார். 
அருப்புக்கோட்டை 
அருப்புக்கோட்டை நகர் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. புதிய, பழைய பஸ் நிலையங்கள் உள்பட நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. 
காரியாபட்டி, நரிக்குடி, தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர், தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, ஆலங்குளம், வத்திராயிருப்பு உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 
சாத்தூர் 
சாத்தூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
முழு ஊரடங்கான நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால் சாத்தூரில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்கனவே சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக அழைப்பிதழை கையில் வைத்திருக்கவேண்டும் எனவும், போலீசார் கேட்கும் போது அதனை காண்பித்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அழைப்பிதழ்கள் உடன் பொதுமக்கள் வாகனங்களில் சென்றனர். ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அழைப்பிதழை காண்பித்து சென்றனர்.
முழு ஊரடங்கை ஒட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கும், முககவசம் அணியாதவர்களுக்கும் வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் தலைமையிலான போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களை தேவையின்றி வெளியே சுற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

Next Story