யானை தந்தம் பதுக்கிய 2 பேர் கைது


யானை தந்தம் பதுக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2022 8:17 PM GMT (Updated: 23 Jan 2022 8:17 PM GMT)

திருச்சி அருகே யானை தந்தம் பதுக்கிய 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

திருவெறும்பூர்
வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி, வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள தேவராயநேரி நரிக்குறவர் காலனியில் நேற்று பகல் சென்னை உதவி வன பாதுகாவலர் மகேந்திரன், திருச்சி உதவி வனப்பாதுகாவலர் நாகையா ஆகியோர் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு யானை தந்தத்தின் சிறிய 5 துண்டுகளை 2 பேர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
2 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி, சவுந்தரராஜன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள், விற்பனைக்காக வைத்திருந்த யானை தந்தத்தின் சிறிய 5 துண்டுகளையும் பறிமுதல் செய்தனர். 3 செ.மீ.நீளம், 1.5 செ.மீ.அகலத்துடன் புலிநகம் போல் உள்ள இந்த யானை தந்த துண்டுகளை சங்கிலி, மோதிரங்களில் பதித்து அதிக விலைக்கு விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. மேலும், யானை தந்த துண்டுகள் இவர்களுக்கு கிடைத்தது எப்படி? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story