மர்மமான முறையில் செத்த 24 குரங்குகள்


மர்மமான முறையில் செத்த 24 குரங்குகள்
x
தினத்தந்தி 23 Jan 2022 8:21 PM GMT (Updated: 2022-01-24T01:51:06+05:30)

திருச்சி அருகே 24 குரங்குகள் மர்மமான முறையில் செத்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமயபுரம்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெடுங்கூர் பகுதியில் குரங்குகள் மர்மமான முறையில் செத்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையிலும், திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் அறிவுரையின்படியும், எம்.ஆர்.பாளையம் உதவி வனப் பாதுகாவலர் சம்பத்குமார், வனச்சரகர் கோபி உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது, 24 குரங்குகள் மர்மமான முறையில் செத்து கிடந்தன. பின்னர் அந்த குரங்குகளை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பொதுமக்களுக்கு இடையூறு
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில், பொதுமக்களுக்கு இடையூறாக கிராம பகுதியில் சுற்றித்திரிந்த குரங்குகளை சிலர் பிடித்து 5 குரங்குகளை அடைக்கும் ஒரு கூண்டில் 24 குரங்குகளை அடைத்து கொண்டு வந்திருக்கலாம் என்றும், அப்போது குரங்குகள் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்றும் வனத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும், அந்த குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்பது குறித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story