புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Jan 2022 9:34 PM GMT (Updated: 23 Jan 2022 9:34 PM GMT)

புகார் பெட்டி

பாதியில் நிற்கும் பணி

அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட புதுமேட்டூரில் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வந்தது. தற்போது பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். இதனால் கழிவுநீர் செல்லாமல் அப்படியே தேங்கி கிடக்கிறது. கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் புதுமேட்டூரில் சாக்கடை வடிகாலை முழுமையாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சண்முகவேல், புதுமேட்டூர்.
  
நாய்கள் தொல்லை 

  ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 40-வது வார்டில் கற்பகம் லேஅவுட், மோசிக்கீரனார் வீதி, கோட்டையார் வீதி, ஓம் காளியம்மன் கோவில் வீதி, பெரிய மாரியம்மன் கோவில் வீதி உள்பட 33 வீதிகள் உள்ளன. இப்பகுதியில் தெருநாய்கள் ஏராளமானவை சுற்றி திரிகின்றன. நடந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்திச்சென்று கடிக்கின்றன. நாய்களுக்கு பயந்து வேகமாக செல்லும்போது சிலர் கீழே விழுந்து காயமடைகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருநாய்களை உடனடியாக பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  என்.அன்புத்தம்பி, ஈரோடு.
  
குழி மூடப்படுமா?

  கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தகுதிரையில் தனியார் கல்லூரி அருகே ஈரோடு-சத்தி ரோட்டில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு குழி தோண்டினார்கள். அதன்பின்னர் அந்த குழி மூடப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் அதில் விழுந்து விடும் வாய்ப்பு உள்ளது. எனவே குழியை உடனே மூடுவதற்கு அதகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  கே.எஸ்.கார்த்தி, ஒத்தகுதிரை.
  
வீணாகும் குடிநீர் 

  அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டில் தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு பேரூராட்சி மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இதில் ஒரு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. உடனே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  அருள், அந்தியூர்
  
குடிநீர் வசதி

  பவானி தாலுகா ஆண்டிகுளம் ஊராட்சிக்கு உள்பட்டது பழைய காடையம்பட்டி. இங்குள்ள பத்ரகாளியம்மன் அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, பக்தர்களின் வசதிக்காகவும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காகவும் குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த குழாயில் கடந்த பல நாட்களாகவே தண்ணீர் வராததால், கோவிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆண்டிகுளம் ஊராட்சி பழைய காடையம்பட்டி பத்ரகாளியம்மன் அருகே உள்ள ஆழ்துளைக்கிணறு குழாயை சரி செய்து மீண்டும் தண்ணீர் வர நடவடிக்கை எடுப்பார்களா?
  பொதுமக்கள், பழைய காடையம்பட்டி.
  
புதர்கள் அகற்றப்படுமா?

  கோபி மொடச்சூர் கிங் அவென்யூவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இதன் எதிர்புறம் உள்ள காலி இடத்தில் செடி, கொடிகள், மரங்கள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகின்றன. இதனால் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். உடனே மாவட்ட நிர்வாகம் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ஊர் பொதுமக்கள், கோபி மொடச்சூர் கிங் அவன்யூ.
  
  
சாலை அகலப்படுத்தப்படுமா?

  கோபி வட்டம் மேவானி ஊராட்சியில் சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை அகலப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
   ஊர் பொதுமக்கள், மேவானி.
  
  


Next Story