3-வது வாரமாக முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய ரோடுகள்


3-வது வாரமாக முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய ரோடுகள்
x
தினத்தந்தி 23 Jan 2022 9:35 PM GMT (Updated: 23 Jan 2022 9:35 PM GMT)

3-வது வாரமாக முழு ஊரடங்கையொட்டி நேற்று ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஈரோடு
3-வது வாரமாக முழு ஊரடங்கையொட்டி நேற்று ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன. 
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மருத்துவமனைகள், மருந்தகங்கள் மட்டும் திறந்திருக்கும். பால் வினியோகம் நடைபெறும். அதுதவிர மற்ற எந்த கடைகளும் திறக்கப்படாது. ஆம்புலன்ஸ்கள், அமரர் ஊர்தி சேவைகள் இயங்கும். பஸ்கள் ஓடாது. அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்கள் செயல்படலாம்.
அதன்படி கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டன. நேற்று 3-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கோபி
கோபியில் ஈரோடு சத்தி ரோடு, மொடச்சூர் கோபி ரோடு, காசிபாளையம் சத்தி ரோடு, கோபி அந்தியூர் ரோடு, அளுக்குளி, நல்லகவுண்டன்பாளையம், மொடச்சூர், வேட்டைக்காரன் கோவில், கொளப்பலூர் ஆகிய பகுதிகளில் சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.
கோபி தினசரி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குன்னத்தூர், சத்தி, ஈரோடு ஆகிய ரோடுகள் சந்திக்கும் இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்தும், எச்சரித்தும் அனுப்பினார்கள்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினார்கள். வடக்கு பேட்டை, கடைவீதி, ரங்கசமுத்திரம், கோட்டுவீராம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ரோடுகள் வெறிச்சோடி கிடந்தது. பூ மார்க்கெட் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டிருந்தன. பஸ் நிலையம், பாலம், மணிக்கூண்டு, கோட்டுவீராம்பாளையம் அருகில் ஒரிரு போலீசார் நின்று சோதனையில் ஈடுபட்டனர்.
பவானி
பவானி, ஜம்பை, காலிங்கராயன்பாளையம், சித்தோடு ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் சாலைகளில் ஆட்டோக்கள் முதல் பஸ், லாரி வரை வாகனங்கள் எதுவும் செல்லவில்லை. இதனால் பவானி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
பெருந்துறை
பெருந்துறையில் பஸ் நிலையம் வெறிச்சோடி காட்சியளித்தது. முக்கிய ரோடுகளான கோவை ரோடு, பவானி ரோடு, ஈரோடு ரோடு, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு ஆகியவை வாகன போக்குவரத்தின்றி அமைதியாக இருந்தன. தினசரி மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. பார்சல் வியாபாரத்துக்காக மட்டும், ஓரிரு ஓட்டல்கள் திறந்திருந்தன. ரோடுகளில் மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை.
கொடுமுடி
கொடுமுடியில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள். புதிய பஸ் நிலையம், கடைவீதி, பழைய பஸ் நிலையம், சாலைப்புதூர் பைபாஸ் சாலை, ஒத்தக்கடை ஆகிய இடங்களில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. போலீசார் அனைத்து இடங்களிலும் சோதனை பணியில் ஈடுபட்டார்கள்.
அந்தியூர்
அந்தியூர் ரோடுகளில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன. அந்தியூர் கால்நடை சந்தை கூடவில்லை. அதேபோல அத்தாணி, ஆப்பக்கூடல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வாகனங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே சென்று வந்தன. அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிவகிரி
சிவகிரி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சிவகிரி கடைவீதி பகுதி, அம்மன் கோவில், விளக்கேத்தி பஸ் நிறுத்தம் உள்பட பல பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சென்னிமலை
சென்னிமலையில் காங்கேயம் ரோடு, குமரன் சதுக்கம், ஈங்கூர் ரோடு, குமாரபுரி ஆகிய முக்கிய இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உமாபதி, கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் திருமணத்திற்கு செல்வதாக கூறி அழைப்பிதழ்களை போலீசாரிடம் காட்டி சென்றனர். ஊரடங்கை மீறி சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி சத்தி கோவை தேசிய நெடுஞ்சாலை, நம்பியூர் ரோடு, பவானிசாகர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன. பவானிசாகர் ரோட்டில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Next Story