நாமக்கல்லில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


நாமக்கல்லில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Jan 2022 2:00 PM GMT (Updated: 2022-01-24T19:30:59+05:30)

நாமக்கல்லில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்:
நாமக்கல்லில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறப்பு சிகிச்சை மையம்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆங்காங்கே கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட கொண்டிசெட்டிப்பட்டியில் 960 வீடுகள் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளன. இந்த குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பை கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அங்கு 150 படுக்கைகள் போடுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் முற்றுகை
இதுகுறித்து தகவல் அறிந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு பணம் செலுத்தியவர்கள் நேற்று காலையில் அங்கு திரண்டனர். அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி, முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-
அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 960 வீடுகள் உள்ளன. அவற்றில் 500 வீடுகளுக்கு முழு தொகையை செலுத்தி 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறோம். ஆனால் அதிகாரிகள் வீடுகளை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். தற்போது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றினால், எங்களுக்கு வீடுகள் கிடைப்பதற்கு மேலும் தாமதமாகும். எனவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் நாமக்கல் தாசில்தார் தமிழ்மணி, உதவி பொறியாளர் சங்கீதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது வருகிற 1-ந் தேதிக்கு மேல் வீடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து காலை 10 மணி அளவில் தொடங்கிய போராட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

Next Story