தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Jan 2022 3:15 PM GMT (Updated: 24 Jan 2022 3:15 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புழுதி பறக்கும் சாலை 

நெல்லை மாவட்டம் பத்தமடை- சேரன்மாதேவி செல்லும் சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையில் ஜல்லி கற்கள் போடப்பட்டு உள்ளது. ஆனால், சாலைகளில் புழுதி பறப்பதால் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் விபத்து நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த சாலை பணியை விரைவுபடுத்தவும், சாலையில் புழுதி பறக்காத வண்ணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறேன்.
முகம்மது அப்பாஸ், பத்தமடை.

நோய் பரவும் அபாயம்

மேலப்பாளையம் 36-வது வார்டு புகாரி தங்கள் தைக்கா தெரு கிழக்கு பகுதியில் கழிவுநீர் சாக்கடை சிலாப் உடைந்து சாக்கடை திறந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் ெசல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. ஆகவே, இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
காஜாமுகைதீன், மேலப்பாளையம்.

வழிகாட்டி பலகை வைக்க வேண்டும்

திசையன்விளை தாலுகா குட்டம் பஞ்சாயத்து வெம்மணங்குடி வடக்கு பகுதியில் குட்டம், உவரி செல்ல 2 சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த வழியாக புதிதாக செல்லும் பயணிகள் மேற்கண்ட சாலைகள் எந்த ஊருக்கு செல்கிறது என்று தெரியாமல் குழம்புகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலைகளில் ஊர் பெயர் கொண்ட வழிகாட்டி பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பள்ளம் சரிசெய்யப்படுமா? 

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் 31-வது வார்டு ஆண்டவர் 3-வது தெருவில் சாக்கடை நீர் செல்வதற்காக பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த பாலத்தில் தற்போது பள்ளம் விழுந்து உள்ளது. இதனால் அந்த தெருவுக்குள் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. மேலும், இந்த பள்ளம் வழியாக சிலர் சாக்கடை நீரில் தவறி விழுந்து காயம் அடைகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி அந்த பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டுகிறேன்.
ரிபாய், மேலப்பாளையம்.

எரியாத தெருவிளக்குகள்

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் குமாரபுரம் ஊராட்சி தரகன்காடு கிராமத்தில் உள்ள தெரு விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, தெரு விளக்குகளை எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
நாமதுரை, தரகன்காடு.

வாறுகால் வசதி செய்து கொடுக்கப்படுமா?

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா ராயகிரி நகர பஞ்சாயத்து 3-வது வார்டு காளியம்மன் கோவில் மேற்கு தெருவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. ஆனால் இந்த தெருவில் சாலை வசதி, வாறுகால் வசதி இல்லை. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகர பஞ்சாயத்தில் பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை. ஆகவே, அந்த தெருவில் சாலை, வாறுகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கரண், ராயகிரி.

ஆபத்தான மின்கம்பம் 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சன்னதி தெருவில் தூத்துக்குடி-ஏரல் மெயின்ரோட்டு அருகில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும், அந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, பொதுமக்களின் நலன் கருதி அந்த ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சித்திரைவேல், ஸ்ரீவைகுண்டம்.

Next Story