தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 24 Jan 2022 5:09 PM GMT (Updated: 24 Jan 2022 5:09 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
 பெரம்பலூர் ரோவர் வளைவு அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையும் உள்ளது. ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றுவதும், இறக்கி விடுவதும் இல்லை. மாறாக ரோவர் வளைவு அருகேயே பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு கூடுதலாக போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கோபி, பெரம்பலூர்.

சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள மண்
புதுக்கோட்டை நெல்லுமண்டி கிழக்கு 3-ம் வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது தெருவில் சாக்கடை தோண்டப்பட்டு அந்த மண் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே உடனடியாக குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.

மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா நாகுடி  வெட்டனூர் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சாலையின் நடுவே மேலே செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் விவசாயத்திற்கு நெற் கதிர்கள் அறுக்கும் எந்திரம் மின்கம்பியில் உரசுவதால் அந்த வழியாக செல்ல முடியவில்லை. எனவே உடனடியாக தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நாகுடி, புதுக்கோட்டை

வேகத்தடை அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அதவத்தூர் கிழக்கு விநாயகபுரம் தெரு வளைவில் அதிவேகமாக  வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 பார்த்தசாரதி, அதவத்தூர் கிழக்கு, திருச்சி.

மயான கொட்டகையை மாற்ற வேண்டும்
கரூர் மாவட்டம் நெய்தலூர் ஊராட்சி, பெரியபனையூரில் உள்ள அம்பேத்கர் நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக இறந்தவர்களின் உடலை புதைக்கவும்,எரிக்கவும் தனியாக சிமெண்டு அட்டையால் (ஆஸ்பெட்டாஸ்) சிறிய மயான கொட்டகை பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மயான கொட்டகை பழுதடைந்து மேற்கூரையில் சிமெண்டு அட்டைகள் உடைந்து ஓட்டை விழுந்துள்ளன. மேலும் மரங்கள் வளர்ந்தும்,செடி,கொடிகள் முளைத்தும் உள்ளன. இதனால் இறந்தவர்கள் உடலை எரிப்பதற்கும்,புதைப்பதற்கும் இடையூறாக இருந்து வருகின்றது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பழுதடைந்த மயான கொட்டகையை அகற்றி புதிய மயான கொட்டகை அமைத்து தர வேண்டும்.
பொதுமக்கள், பெரியபனையூர், கரூர் 

பச்சமலை கோரையாறு அருவிக்கு பாதை வசதி செய்யப்படுமா?
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சமலை வண்ணாடு பஞ்சாயத்தில் மினி குற்றாலம்  கோரையாறு அருவி உள்ளது. இந்த அருவிக்கு செல்ல ஒத்தையடி பாதை வழியாகத்தான் செல்ல முடியும். அந்தப் பாதையும் சறுக்கல் நிறைந்ததாகவும் கால் வைத்து நடந்தால் வழுக்கி கீழே விழும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பெய்யும் மழையின் போது நீர் வரத்து ஆரம்பித்து நீர்வீழ்ச்சியாக ஆர்ப்பரித்து கொட்டும். இந்த சுத்தமான மூலிகைத் தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே தமிழகத்தில், தேனி,நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைந்திருக்கும் அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. அதைப்போலவே  கோரையாறு அருவிகளுக்கு  செல்லும் நடைபாதையை புதுப்பித்து சீரமைத்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் சார்பில் வேண்டுகோள் வைக்கின்றோம்.
பொதுமக்கள், துறையூர், திருச்சி.

Next Story