புகார் பெட்டி வாயிலாக கலெக்டருக்கு கோரிக்கை விடுத்த பொதுமக்கள்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 24 Jan 2022 5:45 PM GMT (Updated: 2022-01-24T23:15:35+05:30)

மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால், கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டு தங்களின் கோரிக்கையை கலெக்டருக்கு தெரிவித்தனர்.

கரூர்
ஒத்திவைப்பு
கரூரில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்ஒருபகுதியாக திங்கட்கிழமைதோறும் நடத்தப்பட்டு வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளிக்க புகார்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மருத்துவ நிதிஉதவி
அந்த புகார் பெட்டியில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சாந்தப்பாடி கிராமம், கரியாஞ்செட்டிவலசு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் போட்ட மனுவில், எனக்கு 17 வயதில் அரிவாசு என்ற மகன் உள்ளார். என் மகனுக்கு ரத்த அடைப்பின் காரணமாக சிறுமூளை பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை இல்லாததால், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுரையின்பேரில் எனது மகனை கோவை மருத்துவமனையில் சேர்த்து ரூ.30 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி சிகிச்சை மேற்கொண்டேன். தற்போது மகனின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், மேலும் சிகிச்சை அவசியமாதலால் என் சக்திக்கு மீறிய கடன்களுக்கு ஆளாகிய என்னால் பணம் செலவழிப்பது என்பது சாத்தியமில்லை. எனவே எனது மகனை காப்பாற்ற மருத்துவ நிதி உதவி செய்து தர வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

Next Story