அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்த முயன்ற 5 பேர் கைது


அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்த முயன்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2022 6:12 PM GMT (Updated: 2022-01-24T23:42:47+05:30)

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததாக கூறி அதை கண்டித்து அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்த முயன்ற இந்து தேசிய கட்சியினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மக்கள் மனுக்களை போடுவதற்காக மனு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. அதில் மக்கள் மனுக்களை போட்டு சென்றனர். தூத்துக்குடி மாவட்ட இந்து தேசிய கட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் அந்த கட்சியினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அல்வா கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

முன்னதாக அவர்கள் கூறுகையில், ‘தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் வாக்குறுதிகளாக நகைக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, மகளிர் சுயஉதவிக்குழு கடன் ரத்து, எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டனர். தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்து அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட வந்தோம்’ என்று கூறினர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை கட்சியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். தலைவர் கருப்பசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் வைரம், முனியசாமி, சுடலைமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முகமது ஜான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர். 

அந்த மனுவில், ‘திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமம், சேலம் மாவட்டம் இடைக்காடு கிராமத்திலும் அருந்ததியர் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு இழப்பீடு வழங்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரத்தை சேர்ந்த ஜெகன்ராஜ் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘நான் வெல்டிங் தொழில் செய்து வருகிறேன். என்னிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுமாறு ஒருவர் கூறினார். அதன்பேரில் நான் ரூ.20 லட்சம் வரை முதலீடு செய்தேன். ஆனால் எனக்கு ரூ.5 லட்சம் மட்டுமே திருப்பி தந்தார். மீதம் உள்ள பணத்தை திருப்பி கேட்டபோது துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ஆகையால் எனது பணத்தை மீட்டுத்தருவதுடன் துப்பாக்கியால் மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

Next Story