மாணவி சம்பந்தமான வீடியோவை பதிவு செய்தவர், இன்று போலீசில் ஆஜராக வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மாணவி சம்பந்தமான வீடியோவை பதிவு செய்தவர், இன்று போலீசில் ஆஜராக வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Jan 2022 8:00 PM GMT (Updated: 2022-01-25T01:30:22+05:30)

பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவர் சம்பந்தமான வீடியோவை பதிவு செய்தவர் இன்று (செவ்வாய்க்கிழமை) போலீஸ் துணை சூப்பிரண்டு முன்பு ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை, 

பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவர் சம்பந்தமான வீடியோவை பதிவு செய்தவர் இன்று (செவ்வாய்க்கிழமை) போலீஸ் துணை சூப்பிரண்டு முன்பு ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மாணவி தற்கொலை வழக்கு

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்-2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி மாணவியின் தந்தை முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். 
இந்த வழக்கில் மாணவி மதமாற்றத்துக்கு வற்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விசாரணை செய்யும் போலீசார் எந்தவித குற்றச்சாட்டுக்கும் இடம் தராத வகையில் வழக்கை விசாரிக்க வேண்டும். மாணவி இறப்பதற்கு முன்பாக கூறிய தகவல்களை அவரது பெற்றோர், மாஜிஸ்திரேட்டுவிடம் வாக்குமூலமாக தெரிவிக்க வேண்டும் என ஏற்கனவே நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

வாக்குமூலம் சமர்ப்பிப்பு

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மாணவியின் பெற்றோர் நேரில் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர் என்றார்.
பின்னர் அவர்கள் அளித்த வாக்குமூலம் தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. . 
பின்னர், “மாணவி சம்பந்தப்பட்ட வீடியோவின் உண்மைத்தன்மை சோதிக்கப்பட்டதா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, “யூடியூப்பில் அந்த வீடியோ உள்ளது. வீடியோவின் உண்மைத்தன்மையை அறிய பதிவு செய்யப்பட்ட செல்போன் தேவை. மாணவி இறப்பு சம்பந்தமாக வழக்கில் பள்ளி ஊழியர்கள், மாணவர்கள், செவிலியர் உள்பட 37 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 14 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒருவாரம் அவகாசம் அளிக்க வேண்டும்”் என கோரினார்.

ஆஜராக உத்தரவு

தொடர்ந்து நீதிபதி, “பெற்றோரின் வாக்குமூலத்தில், மாணவி பேசிய வீடியோ பதிவின் சி.டி. காவல்துறையினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “யார் வீடியோவை எடுத்தது?” என்ற கேள்விக்கு, “முத்துவேல் என்பவர்தான் வீடியோ எடுத்தார். ஆனால் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை” என மாணவியின் பெற்றோர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து நீதிபதி, “மாணவியின் பெற்றோரது வாக்குமூலத்தை விசாரணை அதிகாரியிடம் வழங்கும்படி, கோர்ட்டு பதிவாளருக்கு உத்தரவிடுகிறேன். அந்த வீடியோவில் இருப்பது மாணவியின் குரல் தானா? என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. அதற்கு வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போன் தேவை. எனவே அந்த வீடியோவை பதிவு செய்த முத்துவேல் நாளை (அதாவது இன்று) காலை 10 மணிக்கு வல்லம் கேம்ப் அலுவலகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு முன்பு ஆஜராகி, அந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை சமர்ப்பிக்க வேண்டும். மாணவியின் பெற்றோரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
விசாரணை அதிகாரி மயிலாப்பூரில் உள்ள தடயஅறிவியல் அலுவலகத்திற்கு செல்போன், வீடியோ பதிவு உள்ள சி.டி. ஆகியவற்றை அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய வேண்டும். அதுதொடர்பாக வருகிற வியாழக்கிழமை (27-ந்தேதி) மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.
பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Next Story