‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 24 Jan 2022 9:25 PM GMT (Updated: 24 Jan 2022 9:25 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வேகத்தடை மாற்றி அமைக்கப்படுமா?
ஈரோடு சோலார் அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் முன்பு ஈரோடு-கரூர் மெயின்ரோட்டில் மொத்தம் 4 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சிறிது, பெரிது, மிகப்பெரிது என 3 அளவுகளில் அடுத்தடுத்து வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஒரே அளவில் வேகத்தடைகளை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அபிமன்யு, ஈரோடு. 

பஸ்வசதி வேண்டும்
ஈரோட்டில் இருந்து ஊஞ்சலூர், கொடுமுடி, நொய்யல் வழியாக பரமத்தி வேலூருக்கு அரசு பஸ் வசதி இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு பஸ் இயக்கப்பட்டது. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது. நாள்தோறும் பரமத்தி வேலூர் பகுதியில் ஏராளமானோர் கொடுமுடி வந்து அங்கிருந்து வேறு ஒரு பஸ் மாற்றி ஈரோடு வந்து செல்கிறார்கள். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈரோட்டில் இருந்து பரமத்தி வேலூருக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
விக்னகணபதி, கொடுமுடி.

நடுரோட்டில் ஆபத்தான குழி
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பஸ்நிலையத்துக்கு வாசுகி வீதி, அகில்மேடு 7-வது வீதி வழியாகத்தான் பஸ்கள் வருகின்றன. இதில் அகில்மேடு 7-வது வீதியில் டாஸ்மாக் கடை அருகே 4 ரோடுகள் பிரியும் இடத்தில் ஒரு பெரிய ஆபத்தான குழி உள்ளது. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த குழியில் சிக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். பரபரப்பான 4 ரோடு சந்திப்பில் ஆபத்தான குழி இருப்பது, பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இந்த குழியை சரிசெய்வதற்கு ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், ஈரோடு. 

வீணாகும் குழாய்கள்
ஈரோடு சென்னிமலை ரோடு ரெயில் நிலையம் அருகே சாலைகளில் குழாய்கள் பதிக்கப்பட்டன. பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆன பின்னரும் எஞ்சிய குழாய்கள் அப்படியே ரோட்டு ஓரத்தில் கிடக்கின்றன. இவ்வாறு போடப்பட்டுள்ள குழாய்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. வழிவிடுவதற்காக சாலை ஓரத்திற்கு வரும் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சாலையோரத்தில் கிடக்கும் குழாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பாலசுப்பிரமணி,  ஈரோடு.

நாய்களால் தொல்லை
ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருவில் விளையாடும் குழந்தைகளை நாய்கள் கடிக்க வருகின்றன. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துகின்றன. இதனால் அவர்கள் தடுமாறி கீழே விழுகிறார்கள். பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் பி.பி.அக்ரஹாரத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கலில்ரஹ்மான், ஈரோடு. 

பாதியில் நிற்கும் பணி
பவானி ஒன்றியம் கவுந்தப்பாடி ஊராட்சியில் மத்திய அரசின் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. பணி தொடங்கிய சில நாட்களிலேயே பணி நிறுத்தப்பட்டு விட்டது. நிற்காமல் பணி நடந்தாலே முடிவதற்கு வருடக்கணக்கில் ஆகும். இப்படி பாதியில் நிறுத்திவிட்டால் எப்போது பணி முடியும் என்று தெரியவில்லை. எனவே கவுந்தப்பாடி ஊராட்சியில் பாதியில் நிற்கும் குடிநீர் திட்ட பணியை அதிகாரிகள் உடனே தொடங்க ஆவன செய்யவேண்டும். 
பொதுமக்கள், கவுந்தப்பாடி. 

எப்போதும் எாியும் குப்பை
ஈரோடு சோலார் அருகே உள்ள லக்காபுரத்தில் ரிங்ரோடு உள்ளது. இந்த ரோட்டின் ஓரத்தில் ஊராட்சி குப்பை கொண்டுவந்து கொட்டப்படுகிறது. மேலும் இதில் தீயும் வைத்துவிடுகிறார்கள். எப்போதும் குப்பை எரிந்தபடி புகை வந்துகொண்டே இருக்கிறது. இதனால் அந்த பகுதியின் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ரோட்டில் புகை சூழ்ந்திருப்பதால் தடுமாறுகிறார்கள். எனவே லக்காபுரத்தில் சாலையோரம் குப்பைகள் கொட்டுவதையும், அதற்கு தீவைப்பதையும் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதாகர், லக்காபுரம்.


Next Story