கருவில் வளரும் குழந்தை பற்றி தெரிவிக்கும் ஆய்வகங்களின் உரிமம் ரத்து - மந்திரி சுதாகர் எச்சரிக்கை


கருவில் வளரும் குழந்தை பற்றி தெரிவிக்கும் ஆய்வகங்களின் உரிமம் ரத்து - மந்திரி சுதாகர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Jan 2022 9:35 PM GMT (Updated: 24 Jan 2022 9:35 PM GMT)

கருவில் வளரும் குழந்தை பற்றி தகவல் தெரிவிக்கும் ஆய்வகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் எச்சரித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஆய்வகங்களின் உரிமம் ரத்து

  பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள சில ஆய்வகங்களில் பெண்களின் கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து தகவல் தெரிவித்து வருவதாக எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது சட்டத்திற்கு விரோதமானது. இது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஏதாவது ஆய்வகங்கள் ஈடுபடுவது தெரியவந்தால், அந்த ஆய்வகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அந்த ஆய்வகங்களின் உரிமமும் ரத்து செய்யப்படும்.

  சில ஆய்வகங்களில் ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகிறது. டாக்டர்களுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை பற்றிய தகவல்களை யார் வெளியே தெரிவித்தாலும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பரிசோதனை செய்வது கட்டாயம்

  ஜனநாயக நாட்டில் ஆண், பெண் என்ற பேதம் இருப்பதில்லை. இந்த நாட்டில் ஆணும், பெண்ணும் சமமானவர்களே. அதனால் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பது பற்றிய தகவல்களை வெளியே தெரிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் யாருக்காவது கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால், அவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகும். இதுபற்றி அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

  பெங்களூருவில் தான் முதலில் அதிக அளவு கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது மற்ற மாவட்டங்களுக்கும் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. எந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி, ஆஸ்பத்திரிகளில் சேரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ? அந்த மாவட்டங்களை சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அங்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருவதுடன், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
  இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story