பவானியில் கொரோனா தொற்று உறுதியான பயத்தில் பெண் தற்கொலை


பவானியில் கொரோனா தொற்று உறுதியான பயத்தில் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 24 Jan 2022 9:37 PM GMT (Updated: 2022-01-25T03:07:42+05:30)

பவானியில் கொரோனா தொற்று உறுதியான பயத்தில் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

பவானி
பவானியில் கொரோனா தொற்று உறுதியான பயத்தில் பெண் தற்கொலை செய்துகொண்டார். 
கொரோனா தொற்று
பவானி பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் தனது மகனுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. சளி, இருமல் தொந்தரவும் ஏற்பட்டதால் பவானி அரசு ஆஸ்பத்திரியில்        சிகிச்சை பெற்றார். அப்போது        அவருக்கு மருத்துவ பணியாளர்கள் கொரோனா பரிசோதனை செய்தார்கள். அதன்பின்னர்  வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் பரிசோதனை செய்துகொண்ட மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவருடைய மகன் நேற்று முடிவு செய்தார். இதற்காக அவர் வெளியே சென்றுவிட்டார். 
தூக்கில் தொங்கினார்
இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கொரோனா உறுதியான பயத்தில் இருந்த மூதாட்டி விட்டத்தில் கயிறு கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த மகன் தாய் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தார். இதுபற்றி பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள்.
 மேலும் இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story