வீட்டை வாடகைக்கு எடுப்பதாக கூறி நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி


வீட்டை வாடகைக்கு எடுப்பதாக கூறி நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 25 Jan 2022 10:44 AM GMT (Updated: 25 Jan 2022 10:44 AM GMT)

வீட்டை வாடகைக்கு எடுப்பதாக கூறி நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ஜிதேந்தர் (வயது 31). இவர், அயனாவரம், தலைமை செயலக காலனியில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு விடுவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார். அதை பார்த்த ஒருவர், ஜிதேந்தரை தொடர்பு கொண்டார்.

டெல்லியைச் சேர்ந்த எனது பெயர் அணிகேட் விஜய்கல்போர். ராணுவ வீரரான நான், சென்னை விமான படை தளத்துக்கு பணி மாறுதல் ஆகி வர உள்ளதால் உங்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து கொள்வதாக கூறினார். அதற்கான முன்பணம் அனுப்புவதற்கு உங்கள் வங்கி கணக்கில் இருந்து எனது வங்கி கணக்கிற்கு முதலில் 2 ரூபாய் அனுப்புமாறும் கூறினார்.

அதை நம்பி ஜிதேந்தரும் தனது வங்கி கணக்கில் இருந்து அந்த நபரின் வங்கி கணக்கிற்கு 2 ரூபாய் அனுப்பினார். பதிலுக்கு அந்த நபர் 4 ரூபாயாக திருப்பி அனுப்பினார். சிறிது நேரத்தில் ஜிதேந்தர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்மநபரை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

பின்னர்தான் மர்மநபர் தன்னிடம் நூதன முறையில் ரூ.1 லட்சத்தை மோசடி செய்ததை ஜிதேந்தர் அறிந்தார். இதுபற்றி அண்ணாநகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் ஜிதேந்தர் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story