சாலையில் வீசப்படும் மதுபாட்டிலில் மிச்சமிருப்பதை ருசிக்கும் குரங்குகள்


சாலையில் வீசப்படும் மதுபாட்டிலில் மிச்சமிருப்பதை ருசிக்கும் குரங்குகள்
x
தினத்தந்தி 25 Jan 2022 2:39 PM GMT (Updated: 25 Jan 2022 2:39 PM GMT)

கோத்தகிரி-மேட்டுபாளையம் சாலையில் வீசப்படும் மதுபாட்டிலில் மிச்சமிருப்பதை குரங்குகள் எடுத்து குடிப்பதால் போதையில் தள்ளாடி விபத்தில் சிக்கும் பரிதாபம் உள்ளது.

கோத்தகிரி

கோத்தகிரி-மேட்டுபாளையம் சாலையில் வீசப்படும் மதுபாட்டிலில் மிச்சமிருப்பதை குரங்குகள் எடுத்து குடிப்பதால் போதையில் தள்ளாடி விபத்தில் சிக்கும் பரிதாபம் உள்ளது.

வனவிலங்குள் நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

இந்த நிலையில் ஊட்டிக்கு செல்லும் வழியில் உள்ள கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஏராளமான குரங்குகள், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. 

 இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களை சாலையோரத்தில் வீசக்கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், வனவிலங்களின் நலன் கருதியும் பிளாஸ்டிக் பயன்படுத்த நீலகிரி மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாலையோரத்தில் வீசப்படும் மதுபாட்டில்கள்

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மதுபாட்டில்களை வீசிசெல்கின்றனர். இதனால் சாலையில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் உடைந்து கிடக்கின்றன. இவை வனவிலங்குகளின் கால்களை பதம்பார்க்கும் அபாயம் உள்ளது. 

மேலும் மதுபாட்டில்களில் மீதம் உள்ள மதுவை சாலைகளில் உலா வரும் குரங்குகள் தண்ணீர் என நினைத்து எடுத்து குடிக்கும் அவல நிலை உள்ளது. எனவே கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மதுபாட்டில்களை வீசிசெல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து வனஆர்வலர்கள் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் தடையைமீறி உணவு பொருட்களை வீசி செல்கின்றனர். இதனை சாப்பிடுவதற்காக வனப்பகுதியில் உள்ள குரங்கள் உள்ளிட்ட விலங்குள் சாலைக்கு வருகின்றனர். 

இந்த நிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சிலர் குடிபோதையில் மதுபாட்டில்களை சாலையோரத்தில் வீசி செல்கின்றனர். 
இந்த பாட்டில்களில் மீதம் இருக்கும்  மதுவை குரங்குகள் குடிப்பதால் மதுபோதையில் சாலையில் தள்ளாடி சென்று விபத்தில் சிக்கும் பரிதாபம்  உள்ளது. சில குரங்குகள் வாகனங்களில் அடிப்பட்டு கை,கால்களை இழந்து ஊனமாக சுற்றித்திரிகின்றன. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

  எனவே சாலையோரத்தில்  மதுபாட்டில்கள், உணவுபொருட்கள் வீசுபவர்கள் மீது வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story