தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Jan 2022 8:41 PM GMT (Updated: 25 Jan 2022 8:41 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பயன்பாட்டுக்கு வந்த கழிப்பறை
சேலம் மாநகராட்சி 2-வது வார்டு ஜாகீர் அம்மாபாளையம் எட்டிகுட்டை தெருவில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் மின் மோட்டார் பழுதடைந்து இருந்தது. தண்ணீர் இல்லாமல் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து கடந்த 16-ந் தேதி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்மோட்டாரை சரிசெய்து கழிப்பிடத்துக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
-சதீஷ், ஜாகீர்அம்மாபாளையம், சேலம்.
சாலைகளில் கொட்டப்படும் குப்பைகள்
கிருஷ்ணகிரி நகராட்சி தூய்மை பணியாளர்கள், வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் சேரும் குப்பைகளை தினமும் எடுத்துச் செல்கின்றனர். கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, ராஜா தியேட்டர் முன்புறம், கோ-ஆப்ரேட்டிவ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் பொதுமக்கள் சிலர் வந்து குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். நகராட்சி சார்பில் வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது சாலைகளிலேயே குப்பைகள் கொட்டப்படுவதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட இடங்களில் மீண்டும் குப்பை தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தன், கிருஷ்ணகிரி.
பழுதான மின்மோட்டார்
தர்மபுரி மாவட்டம் பிக்கிலி பாணாகாடு கிராமத்தில் மோட்டார் மூலம் குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்மோட்டார் பழுதடைந்துவிட்டது. இதனால் மக்கள் தண்ணீரை தேடி அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதிமின் பழுதான மின்மோட்டாரை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்பொதுமக்கள், பாணாகாட்டு, பென்னாகரம்.
சாலை வசதி வேண்டும் 
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா வெள்ளாளப்பட்டி கிராமம் தாண்டனூர் செல்லும் சாலையில் தற்போது உயர்மட்ட பாலம் பணிகள் நடக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நடந்து செல்ல கூட சாலை வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தர வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், வெள்ளாளப்பட்டி, சேலம்.

Next Story