வளர்ப்பு நாய்களை வேட்டையாடும் சிறுத்தைப்புலி


வளர்ப்பு நாய்களை வேட்டையாடும் சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 26 Jan 2022 1:37 PM GMT (Updated: 2022-01-26T19:07:50+05:30)

குடியிருப்பு பகுதியில் புகுந்து வளர்ப்பு நாய்களை சிறுத்தைப்புலி வேட்டையாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

குன்னூர்

குடியிருப்பு பகுதியில் புகுந்து வளர்ப்பு நாய்களை சிறுத்தைப்புலி வேட்டையாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். 

வனவிலங்குகள் நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதன் அருகில் உள்ள வனப்பகுதியில் வாழும் காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் சில நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன. 

இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. சமீபத்தில் குன்னூர் அருகே கரிமரா அட்டி கிராமத்துக்குள் இரவு நேரத்தில் 2 சிறுத்தைப்புலிகள், 3 கரடிகள் உலா வந்தன. இது அங்கு பொருத்தப்பட்டு  இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. 

சிறுத்தைப்புலி

இந்த நிலையில் குன்னூர் அருகே கேத்தி சாந்தூர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இதனால் அந்த பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்டங்களும், காய்கறி தோட்டங்களும் காணப்படுகின்றன. இந்த குடியிருப்பு பகுதிக்குள் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்து, வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருகிறது. 

கூண்டு வைத்து...

இதேபோன்று நேற்று முன்தினம் இரவில் புகுந்த அந்த சிறுத்தைப்புலி, அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்கு முன்புறம் இருந்த தோட்டத்தில் உலா வந்தது. இது அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் பொதுமக்கள் பீதி  அடைந்து உள்ளனர். 

மேலும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் விவசாயம் உள்ளிட்ட எந்த பணிகளுக்கும் செல்லாமல் இருக்கின்றனர். எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்தில் விட வேண்டும் என்று வனத்துறைக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story