குடியரசு தின விழா விழுப்புரத்தில் கலெக்டர் மோகன் தேசிய கொடி ஏற்றினார்


குடியரசு தின விழா விழுப்புரத்தில் கலெக்டர் மோகன் தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 26 Jan 2022 4:59 PM GMT (Updated: 26 Jan 2022 4:59 PM GMT)

விழுப்புரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் டி.மோகன் தேசிய கொடி ஏற்றினார்.


விழுப்புரம்,

இந்தியா முழுவதும் நேற்று 73-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குடியரசு தின விழா நடைபெற்றது.

இதையொட்டி விழா மைதானத்திற்கு காலை 8 மணியளவில் மாவட்ட கலெக்டர் டி.மோகன் வருகை தந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் போலீசார் வரவேற்றனர். 

சரியாக காலை 8.05 மணிக்கு கலெக்டர் டி.மோகன், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அமைதியை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், வண்ண, வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டார்.

அதனை தொடர்ந்து கலெக்டர் டி.மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுடன் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினர், தீயணைப்புத்துறை, ஊர்காவல் படையினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நலத்திட்ட உதவிகள்

அதன் பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 69 போலீசார்களுக்கு முதல்-அமைச்சரின் பதக்கங்களையும் மற்றும் மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் என 355 பேருக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் டி.மோகன் வழங்கினார்.


தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மைதுறை உள்ளிட்ட துறைகளில் 18 பேருக்கு ரூ.11 லட்சத்து 25 ஆயிரத்து 629 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் தியாகத்தை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த புகைப்பட தொகுப்பு கண்காட்சியை கலெக்டர் டி.மோகன் நேரில் பார்வையிட்டார். முன்னதாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் உள்ள மகாத்மாகாந்தியின் சிலைக்கு கலெக்டர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட தியாகிகள் 

 சுதந்திர போராட்ட தியாகி அபரன்ஜி குப்தாவின் தியாகங்களை போற்றும் வகையில் அவரது வாரிசுதாரரான கோலியனூரில் உள்ள சுலோச்சனா என்பவரின் வீட்டிற்கு கலெக்டர் டி.மோகன் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். 

அப்போது சுலோச்சனா, தனது சொந்த சேமிப்பிலிருந்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரத்தை கலெக்டரிடம் வழங்கினார். அதன் பின்னர் அதே பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியான மறைந்த கிருஷ்ணனின் தியாகங்களை போற்றும் வகையில் அவரின் வாரிசுதாரரான சாரதாம்பாள் வீட்டிற்கு சென்று அவரையும் கவுரவித்தனர். இதேபோல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வீட்டிற்கு அந்தந்த தாசில்தார்கள் நேரில் சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி கவுரவித்தனர்.



இவ்விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி, தலைமை குற்றவியல் நீதிபதி கோபிநாதன், மாஜிஸ்திரேட்டுகள் அருண்குமார், பூர்ணிமா, கலெக்டரின் மனைவியான நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை கூடுதல் இயக்குனர் கலைச்செல்வி, விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா, மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவீந்திரன், பார்த்திபன், ஊர்காவல் படை மண்டல தளபதி ரகுநாதன் உள்பட பலர் முககவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்துகொண்டனர். விழாவையொட்டி கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story