தர்மபுரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் கலெக்டர் திவ்யதர்சினி தேசியக்கொடியை ஏற்றினார்


தர்மபுரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் கலெக்டர் திவ்யதர்சினி தேசியக்கொடியை ஏற்றினார்
x
தினத்தந்தி 26 Jan 2022 5:14 PM GMT (Updated: 2022-01-26T22:44:38+05:30)

தர்மபுரியில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி தேசியக்கொடியை ஏற்றினார்.

தர்மபுரி:
தர்மபுரியில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி தேசியக்கொடியை ஏற்றினார்.
குடியரசு தின விழா
இந்திய குடியரசு தினவிழா தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் காவல்துறை சார்பில் 2022-ம் ஆண்டுக்கான தமிழக முதல்- அமைச்சரின் காவலர் பதக்கங்களை தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 27 போலீசாருக்கு கலெக்டர் வழங்கினார். இதேபோல் கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட 101 அரசு அதிகாரிகள், பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
விருது 
இதேபோல் மாவட்ட அளவில் துறை சார்ந்த பணிகளை சிறப்பாக மேற்கொண்டு பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட அரூர் தாலுகா அலுவலகம், தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அதியமான்கோட்டை போலீஸ் நிலையம், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட குண்டல மடுவு, நரசிங்கபுரம், கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், கருங்கல்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றிற்கு கேடயங்களை வழங்கி கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். இதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு கணிதம் கற்பிக்கும் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்த 9 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் இணைப்பு வழங்கி சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்ட தர்மபுரி இந்தியன் வங்கி, சிறப்பிடம் பெற்ற காரிமங்கலம் இந்தியன் வங்கி கிளை, தமிழ்நாடு கிராம வங்கி, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றிற்கு கலெக்டர் விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மாவட்ட அளவில் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரூர் அரசு மருத்துவமனை ஆகியவற்றிற்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

Next Story