சார்மடி வனப்பகுதியில் காட்டுத்தீ; 10 ஏக்கர் மரம், செடிகள் எரிந்து நாசம்


சார்மடி வனப்பகுதியில் காட்டுத்தீ; 10 ஏக்கர் மரம், செடிகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 26 Jan 2022 9:19 PM GMT (Updated: 2022-01-27T02:49:43+05:30)

மூடிகெரே அருகே சார்மடி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் சுமார் 10 ஏக்கரில் மரம், செடிகள் எரிந்து நாசமானது.

சிக்கமகளூரு: மூடிகெரே அருகே சார்மடி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் சுமார் 10 ஏக்கரில் மரம், செடிகள் எரிந்து நாசமானது.

 சார்மடி வனப்பகுதியில் தீ

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயில் சார்மடி வனப்பகுதி உள்ளது. இங்குள்ள சார்மடி மலைப்பாதை சிக்கமகளூருவில் இருந்து மங்களூருவுக்கு செல்லும் பிரதான வழியாகும். 

இந்த நிலையில் நேற்று சார்மடி வனப்பகுதியில் மலேமாருத்தா என்ற இடத்தில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் காற்றின் வேகத்தில் காட்டுத்தீ ஏக்கர் கணக்கில் பரவி கொழுந்துவிட்டு பயங்கரமாக எரிந்து கரும்புகையாக வெளியேறியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த வனப்பகுதியை ஒட்டிய மக்கள் பனகல் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் உடனடியாக தகவல் கொடுத்தனர். 

அந்த தகவலின் பேரில் போலீசார், தீயணைப்பு படையினர், வனத்துறையினர் என 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படைவீரர்கள் வனப்பகுதியில் பிடித்து எரிந்த காட்டுத்தீயை, தண்ணீரை பீய்ச்சி அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதியில் பிடித்து எரிந்த தீ அணைக்கப்பட்டது.

 மரம், செடிகள் எரிந்து நாசம்

ஆனாலும் சுமார் 10 ஏக்கர் வரையிலான மரம், செடிகள் தீயில் எரிந்து நாசமானது. ஆனால் வனப்பகுதியில் தீப்பிடித்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை.  மர்மநபர்கள் சிகரெட் பிடித்துவிட்டு கீழே வீசி சென்றதால் தீப்பிடித்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் குறித்து பனகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதற்கிடையே அப்பகுதி மக்கள், வனத்துறையினரிடம் ஆண்டுதோறும் கோடைகாலங்களில் சார்மடி வனப்பகுதியில் காட்டுத்தீப்பிடிப்பது வழக்கமாக நடந்து வருகிறது. ஆகையால் வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்கவும்,  வனப்பகுதிக்குள் சிகரெட் பிடிப்பதை தடுக்க வனத்துறையினர் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதியளித்தனர்.

Next Story