பழையனூரில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டப்படுமா? - விவசாயிகள்


பழையனூரில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டப்படுமா? - விவசாயிகள்
x
தினத்தந்தி 27 Jan 2022 4:36 PM GMT (Updated: 2022-01-27T22:06:31+05:30)

கூத்தாநல்லூர் அருகே, பழையனூரில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் அருகே, பழையனூரில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். 

நெல் கொள்முதல் நிலையம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே நெல் கொள்முதல் நிலையத்துக்கு கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. இடம் தேர்வு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அங்கு இதுவரை நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டப்படவில்லை. 
இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வெட்ட வெளியில் கொட்டி வைக்க வேண்டி உள்ளது. இதனால் நெல்லுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. பழையனூர், சாத்தனூர், கானூர், வடகட்டளை கோம்பூர், நாகங்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை, தாளடி சாகுபடி நடைபெற்றது. 

புதிய கட்டிடம்

தற்போது அறுவடையான நெல்லை, விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே வெட்ட வெளியில் வைத்துள்ளனர். எனவே கொள்முதல் நிலையத்துக்கு புதிய கட்டிடத்தை உடனடியாக கட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வெட்ட வெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விடுகின்றன. அறுவடை செய்த நெல் மூட்டைகளை வெட்ட வெளியில் வைத்து இரவு, பகலாக பாதுகாப்பது சிரமமாக உள்ளது. எனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை உடனடியாக கட்ட வேண்டும். அதுவரை வடபாதிமங்கலம் புனவாசலில் கட்டி முடிக்கப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையத்தினை பயன்பாட்டிற்கு விட வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story