அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் விளம்பர பதாகைகள் ஆகியவற்றை அகற்றினார்கள்


அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் விளம்பர பதாகைகள் ஆகியவற்றை அகற்றினார்கள்
x
தினத்தந்தி 27 Jan 2022 5:03 PM GMT (Updated: 27 Jan 2022 5:03 PM GMT)

அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் விளம்பர பதாகைகள் ஆகியவற்றை அகற்றினார்கள்

திருப்பூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் நேற்று திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், நோட்டீஸ்கள், விளம்பர பதாகைகள் ஆகியவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள்.
சுவர் விளம்பரங்கள் அகற்றம்
திருப்பூர் மாநகராட்சி தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநகராட்சி 60 வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அனைத்து உதவி, இளம் பொறியாளர்களும் தங்களுக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
பொது இடங்களில் உள்ள சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள், அரசியல் கட்சிகளின் சின்னங்களை அகற்றிவிட்டு மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அறிக்கை சமர்ப்பிப்பு
மேலும் தினசரி அகற்றப்படும் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் குறித்த தொகுப்பு அறிக்கையை அதற்கான படிவத்தில் மண்டலம் வாரியாக தொகுத்து நாள்தோறும் சமர்ப்பிக்க வேண்டும். மண்டல உதவி ஆணையாளர்கள், அனைத்து உதவி, இளம் பொறியாளர்கள், அனைத்து தொழில்நுட்ப உதவியாளர்கள், அனைத்து செயல்திறன் பணியாளர்கள் நிலை ஒன்று மற்றும் இரண்டு ஆகியோர் இதை செயல்படுத்த வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
விளம்பர‌ பதாகைகள்
இதைத்தொடர்ந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் ஒட்டப்பட்ட அரசியல் கட்சி சார்ந்த சுவரொட்டிகள், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சியினர் சுவரொட்டிகள், சுவர்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி சின்னங்கள், விளம்பரங்கள், விளம்பர பதாகைகள் ஆகியவற்றையும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அப்புறப்படுத்தினார்கள். அதுபோல் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளின் கீழ் உள்ள கல்வெட்டுக்களையும் மூடினார்கள்.

Next Story