நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் அழிப்பு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் அழிப்பு
x
தினத்தந்தி 27 Jan 2022 5:21 PM GMT (Updated: 2022-01-27T22:51:43+05:30)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

திருக்கோவிலூர், 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும் அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழகம் முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தல் விதிமுறைப்படி நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எழுதப்பட்டிருக்கும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட வேண்டும், அதுபோல் சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் அரசியல் கட்சி சம்பந்தமான நோட்டீசுகள் மற்றும் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட வேண்டும். 

இதன்படி மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் ஏற்கனவே அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியிலும், சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசுகளை அகற்றும் பணியிலும் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கட்சி கொடிக்கம்பங்களில் இருந்த கொடிகளையும் மற்றும் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளையும் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. திருக்கோவிலூர் பஸ் நிலையம், ஐந்து முனை சந்திப்பு நான்கு முனை சந்திப்பு ஏரிக்கரை மூலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் போஸ்டர்களை நகரசபை ஆணையர் கீதா முன்னிலையில் ஊழியர்கள் அதிரடியாக அப்புறப்படுத்தினார்கள். சங்கராபுரம் தேர்வுநிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையில் கள்ளக்குறிச்சி சாலையில் உள்ள தலைவர்கள் சிலைகள் துணியால் மூடப்பட்டன. மேலும் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவை அகற்றப்பட்டு வருகிறது. அப்போது இளநிலை உதவியாளர் ஜெயபிரகாஷ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பெரியசாமி, ரவி, இளங்கோ பேரூராட்சி பணியாளர்கள் இருந்தனர்.
---

Next Story