தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 27 Jan 2022 5:27 PM GMT (Updated: 27 Jan 2022 5:27 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
 அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது முனியன் குறிச்சி கிராமம். இங்குள்ள பெரியத்திருக்கோணம் செல்லும் முதன்மை சாலையில்  செங்குளம் என்ற ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரை பகுதியில் கிழக்கிலிருந்து மேற்காக சாலையோரங்களில் அதிகளவில் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனால் எதிர் எதிரே வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முனியன்குறிச்சி, அரியலூர்

 ஆபத்தான  குடிநீர்  தொட்டி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட வ. உ.சி. நகரில் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும், தொட்டியில் மின் மோட்டாரின் இணைப்பு கீழே தொங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குன்னம், பெரம்பலூர். 

நாய்கள்-மாடுகளால் தொல்லை
புதுக்கோட்டை பஸ் நிலையம், ராஜகோபாலபுரம், டி.வி.எஸ். கார்னர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாய்கள் மற்றும், மாடுகளின் தொல்லை அதிகரித்து  வருகிறது. இரவு நேரங்களில் பணி முடிந்து மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை நாய்கள் கூட்டம், கூட்டமாக வந்து துரத்துகிறது. இதனால் சில நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும் சாலைகளில் மாடுகள் படுத்து கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.

பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை
கரூர் மாவட்டம்,  தோகைமலை ஒன்றியம் நெய்தலூர் ஊராட்சி சின்னப்பனையூர் சமத்துவபுரம் பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெயில் மற்றும் மழை காலங்களில் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அங்குள்ள விளையாட்டு மைதானத்திலும்  செடி, கொடிகள் அதிகம் முளைத்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தோகைமலை, கரூர். 

Next Story