நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 274 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை கலெக்டர் விஷ்ணு பேட்டி


நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 274 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை கலெக்டர் விஷ்ணு பேட்டி
x
தினத்தந்தி 27 Jan 2022 10:23 PM GMT (Updated: 2022-01-28T03:53:45+05:30)

நெல்லை மாவட்டத்தில் நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 274 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள்

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 274 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி மற்றும் அம்பை, களக்காடு, விக்கிரமசிங்கபுரம் ஆகிய 3 நகராட்சிகளும், சேரன்மாதேவி, ஏர்வாடி, கோபாலசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மேலசெவல், மூலைக்கரைப்பட்டி, முக்கூடல், நாங்குநேரி, நாரணம்மாள்புரம், பணகுடி, பத்தமடை, சங்கர்நகர், திருக்குறுங்குடி, திசையன்விளை, வடக்கு வள்ளியூர், வீரவநல்லூர் ஆகிய 17 பேரூராட்சிகளும் உள்ளன.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
397 வார்டுகள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பை நகராட்சியில் 21 வார்டுகளும், களக்காடு நகராட்சியில் 27 வார்டுகளும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகளும், நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளும், 17 பேரூராட்சிகளில் 273 வார்டுகளும் என மொத்தம் 397 வார்டுகள் உள்ளன. மொத்தம் 7 லட்சத்து 54 ஆயிரத்து 504 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 லட்சத்து 67 ஆயிரத்து 921 பேரும், பெண்கள் 3 லட்சத்து 86 ஆயிரத்து 532 பேரும், திருநங்கைகள் 51 பேரும் உள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 259 ஆண் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள், 259 பெண் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள், 414 அனைத்து வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 932 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
மாநகராட்சியில் 490 வாக்குச்சாவடிகள், அம்பை நகராட்சியில் 42 வாக்குச்சாவடிகள், களக்காடு நகராட்சியில் 30 வாக்குச்சாவடிகள், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 51 வாக்குச்சாவடிகள், 17 பேரூராட்சி பகுதிகளில் 319 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நெல்லை மாநகராட்சி மற்றும் சங்கர்நகர் பேரூராட்சிகளில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 1,303 கட்டுப்பாட்டு கருவிகளும், 2,605 வாக்குப்பதிவு எந்திரங்களும் முதல் நிலை பரிசோதனை முடித்து, அதிலிருந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 1,127 கட்டுப்பாட்டு கருவிகளும், 1,127 வாக்குப்பதிவு கருவிகளும் என மொத்தம் 2,254 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆன்லைன் மூலம் முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 3,728 வாக்குப்பதிவு அலுவலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். பறக்கும் படைகள் மாநகராட்சிக்கு 4  குழுக்களும், ஒவ்வொரு நகராட்சியும் ஒரு குழுக்கள் வீதம் 3 குழுக்களும், 17 பேரூராட்சிகளிலும் 10 குழுக்கள் என மொத்தம் 17 குழுக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பொதுமக்களிடம் தேர்தல் தொடர்பான புகார்களை பெறுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 274 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறிப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். ரூ.50 ஆயிரம் வரை ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லலாம். அதற்குமேல் பணம் கொண்டு சென்றால் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
போலீஸ் பாதுகாப்பு
நெல்லை மாவட்டத்தில் 23 சோதனைச்சாவடிகளிலும் 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகர பகுதியில் 7 சோதனைச்சாவடிகளில் 1,168 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். வருகிற 19-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் இருந்தனர்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த அனைத்துக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது.கூட்டத்தில் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு தேர்தல் குறித்து பேசினார்கள்.

Next Story