‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 28 Jan 2022 1:11 PM GMT (Updated: 28 Jan 2022 1:11 PM GMT)

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் 1-வது தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி கதவுகள் உடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. மின்வயர்கள் ஆபத்தான வகையில் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கிறது. குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதிககளில் குழந்தைகள் அதிகம் உள்ளனர். எனவே தேவையற்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இந்த மின் இணைப்பு பெட்டியை உடனடியாக சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- சமூக ஆர்வலர்.



நாய்கள் தொல்லையால் அவதி

சென்னை வியாசர்பாடி அருகேயுள்ள எம்.கே.பி.நகர் 10-வது கிழக்கு தெருவில் இருந்து 19-வது கிழக்கு தெரு வரை உள்ள தெருக்களில், தெரு நாய்களின் தொல்லை மிகுதியாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், முதியோர் அப்பகுதிகளில் செல்லவே அச்சம் கொள்கிறார்கள். வாகன ஓட்டிகளை விரட்டி கடிக்க பாய்கிறது. இரவு நேரங்கள் நாய்கள் ஊளையிட்டு தூக்கத்தை கெடுக்கின்றன.

- எஸ்.ஏ.தெய்வமணி. ஆர்டிசான் குடியிருப்போர் பொதுநலச்சங்கம்.

ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?

சென்னை புழல் சக்திவேல் நகர் 10-வது தெருவில் (ஜெயின் கோவில் வடக்குபுறம்) மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமலேயே கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகளும் தடுமாறி போகிறார்கள்.

- ஜி.முருகராஜன், புழல்.

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளம்

சென்னை கொளத்தூர் சீனிவாசா நகர் 2-வது மெயின்ரோடும், 5-வது குறுக்கு தெருவும் சந்திக்கும் இடத்தில் சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்து சிதைந்து இருக்கிறது. பள்ளம் ஏற்பட்டுள்ள இந்த இடத்தில் தினந்தோறும் வாகனங்கள் சிக்கி விபத்துகள் அரங்கேறுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

- பொதுமக்கள்.



மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே ஹாடோஸ் சாலையில் உள்ள ஒரு பெரிய மரம் பட்டுப்போன நிலையில் எப்போது வேண்டுமானாலும் விழக்கூடிய வகையில் ஆபத்தாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- சமூக ஆர்வலர்.



பூங்கா வருமா? வராதா?

சென்னை மணலி புதுநகர் அருகேயுள்ள துளசி நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவுக்காக இடம் ஒதுக்கப்பட்டு சுற்றுசுவர் போடப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த பணிகளும் அங்கு முன்னெடுக்கப்படவில்லை. அந்த வளாகமே புதர்களும், செடி-கொடிகளும் சூழ்ந்தும், குப்பை கூளங்களால் நிறைந்தும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே இந்த இடத்தில் பூங்கா அமைக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட வேண்டும்.

- பா.பொன்னுதுரை, மணலி புதுநகர்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை அயனாவரம்‌ திருவள்ளுவர் நகர் 98-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு அனேக இடங்களுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளுக்கு இன்னும் இணைப்புகள் தரப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

- பொதுமக்கள்.

அபாயகரமாக தொங்கும் மின்விளக்கு

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி உட்பட்ட திருவள்ளுவர் நகர் முதல் தெருவில் உள்ள மின்கம்பத்தில் மின்வயர்கள் அறுந்த நிலையில் மின்விளக்கு அபாயகரமாக தொங்கிக்கொண்டு இருக்கிறது. இந்தநிலை 4 மாதங்களாக நீடிக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த மின்விளக்கு அறுந்து கீழே விழும் நிலை இருப்பதால் அப்பகுதியில் செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள்.

- ஆர்.அண்ணாதுரை, பொதட்டூர்பேட்டை.



கால்வாய் தூர்வாரப்படுமா?

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட காக்கவாக்கம் ஏரி நீர் பாசன கால்வாய் அனைத்தும் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கி கிடக்கிறது. இதனால் மழை காலங்களில் ஊருக்குள் தண்ணீர் வருவதால் கிராமமே நீரால் மூழ்கி விடுகிறது. எனவே இக்கால்வாயை அளந்து தூர்வாருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

- கே.ஜி.லோகன், சமூக ஆர்வலர்.

மூடாமல் கிடக்கும் பள்ளத்தால் மக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சாமியார் கேட் ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம், ஒரு மாதமாகியும் மூடாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் அங்கு மழைநீர், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் படையெடுக்கின்றன. இதன் காரணமாக நோய்கள் பரவுகிறது. மக்கள் பாதிப்பை உணர்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

சமூக ஆர்வலர்.




Next Story