406 வாக்குச்சாவடிகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 28 Jan 2022 5:40 PM GMT (Updated: 28 Jan 2022 5:40 PM GMT)

கரூர் மாவட்டத்தில் 406 வாக்குச்சாவடிகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கரூர்
விளக்க கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்க கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரிதிநிதிகளிடம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய உத்தரவின்படி தேர்தல் விதிமுறைகளை கலெக்டர் விரிவாக விளக்கிக் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:- 
கரூர் மாவட்டத்தில் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட அறிவிக்கையினை அடிப்படையாக கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குச்சாவடி பட்டியல்கள் 9.11.2021 மற்றும் 5.1.2022 அன்றும், வாக்காளர் பட்டியல்கள் 9.12.2021 மற்றும் 10.1.2022 அன்றும் வெளியிடப்பட்டன. அதனை தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், வேட்பு மனுதாக்கல் இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்கி உள்ளது. வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை 22-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.
கண்காணிப்பு கேமரா
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தல், வேட்புமனுக்களை ஆய்வு செய்தல், வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய நிகழ்வுகள் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படும் இதற்காக அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
491 மின்னனு வாக்குப்பதிவு கருவி
கரூர் மாநகராட்சியில் 48 வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும், குளித்தலை, பள்ளப்பட்டி மற்றும் புகளூர் நகராட்சிகளில் மொத்தம் 75 வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும், 8 பேரூராட்சிகளில் மொத்தம் 123 வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும் நேரடி தேர்தல்கள் நடைபெற உள்ளது. இத்தேர்தல்களுக்கென 12 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 31 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 920 காவல் துறை அதிகாரிகள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு வாக்குச் சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் வீதம் (கூடுதல் நபர்களும் சேர்த்து) மொத்தம் 1,960 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கரூர் மாநகராட்சியில் 191 வாக்குச்சாவடிகளும், 3 நகராட்சிகளிலும் சேர்த்து 91 வாக்குச்சாவடிகளும், 8 பேரூராட்சிகளுக்கும் சேர்த்து 124 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு பதிவிற்கு பயன்படுத்துவதற்காக பாரத மின்னணு நிறுவனத்தினரால் வாக்கு பதிவு எந்திரங்கள் முதல்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதில் வாக்குச்சாவடிகளின் அடிப்படையில் முதல் கட்டமாக நகர்ப்புற அமைப்புகளுக்கு 491 மின்னனு வாக்குப்பதிவு கருவிகளும், 491 கட்டுப்பாட்டு கருவிகளும் ஒதுக்கீடு செய்யும்பணி கடந்த 6-ந் தேதி முடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பார்வையாளர்
கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் நிலையில் ஒருவர் தேர்தல் பார்வையாளராக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட உள்ளார். மேலும், இணை இயக்குனர், உதவி இயக்குனர், துணை ஆட்சியர் நிலையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு ஒரு அலுவலர் வட்டார தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாகவும் வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்திடவும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 406 வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். இதில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் மற்றும் மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக 91 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது (கரூர் மாநகராட்சி -31 வாக்குச்சாவடிகள், 3 நகராட்சிகள் -41 வாக்குச்சாவடிகள், பேரூராட்சிகள் -20 வாக்குச்சாவடிகள்). இந்த 91 வாக்குச்சாவடி மையங்களிலும் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படுவதோடு, வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை கண்காணித்திட சி.சி.டி.வி. மற்றும் வாக்குப்பதிவை நேரலையில் கண்காணித்திடும் வெப் ஸ்டீரீமிங் வசதியும் செய்யப்படும்.
7 வாக்கு எண்ணும் மையங்கள்
மொத்தம் 7 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியும், புகளுர் நகராட்சி, புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு புகளுர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், பள்ளப்பட்டி நகராட்சிக்கு உஸ்வத்துன் ஹசானாமாமாஞ்சி ஹாஜி அப்துல் லத்தீப் மகளிர் கல்லூரியும், குளித்தலை நகராட்சிக்கு அரசு குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், புலியூர் மற்றும் உப்பிடமங்கலம் பேரூராட்சிகளுக்கு புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியும், மருதூர், நங்கவரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய பேரூராட்சிகளுக்கு மாயனூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமும், அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியும் வாக்கு எண்ணும் மையங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் உட்புறமும், வெளிப்புறமும் மற்றும் வாக்கு எண்ணும் அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.
பறக்கும் படைகள்
தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணித்திடவும், தேர்தல் விதிமுறை மீறல் குறித்து ஆய்வு செய்திடவும் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு 45 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கரூர் மாநகராட்சிக்கு 12 குழுக்களும், நகராட்சிகளுக்கு 9 குழுக்களும், பேரூராட்சிகளுக்கு 24 குழுக்களும் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்களை பெறுவதற்காகவும், புகார்கள் மீது உரிய தொடர் நடவடிக்கை எடுப்பதற்காகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்கட்டுப்பாட்டு அறையினை 18004255456 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தங்களது புகார்களை அளிக்கலாம்.
தேர்தல் செலவினங்கள்
பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.17 ஆயிரம், நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.34 ஆயிரம், மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.85 ஆயிரம் அதிகபட்சமாக தேர்தல் செலவினம் என தமிழ்நாடு தேர்தல் ஆணையத் அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவினக் கணக்குகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்ய தவறுபவர்கள் மீது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலில் 3 ஆண்டுகளுக்கு போட்டியிட இயலாதவாறு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். சாதாரண நேரடித் தேர்தல்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் மறைமுகத் தேர்தல்கள் மார்ச் மாதம் 4-ந் தேதி நடைபெறும்.
தேர்தல் பிரசாரம்
சாலை நிகழ்ச்சிகள் நடத்துதல், பாதயாத்திரை, சைக்கிள் மோட்டார் வாகனங்கள் ஊர்வலம் ஆகியவை வருகிற 31-ந் தேதி வரையில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையத்தால் தொடர் அறிவுரைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இக்கூட்டத்தில் கலந்து கொள்வோருக்கு அரசியல் கட்சிகள் முக கவசம் மற்றும் கைகளை சுத்தம் செய்திட கிருமி நாசினி வழங்கிட வேண்டும். உள் அரங்கில் கூட்டம் நடத்துவதற்கான அனுமதி துணை இயக்குனர் (சுகாதாரப்பணி) மூலம் வழங்கப்படும் என்றார்.

Next Story