23 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்த பெண்


23 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்த பெண்
x
தினத்தந்தி 28 Jan 2022 8:19 PM GMT (Updated: 28 Jan 2022 8:19 PM GMT)

பிறந்த 40-வது நாளில் நெதர்லாந்து தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண் 23 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்தார்.

ஓமலூர்:-
பிறந்த 40-வது நாளில் நெதர்லாந்து தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண் 23 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்தார்.
சேலத்தில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
வறுமையில் தவிப்பு
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி அருகே உள்ள தாசசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 50). இவருக்கும் தர்மபுரி மாவட்டம் ஜருகு பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கும் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரங்கநாதனுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து அவர் அமுதாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன அடுத்த ஆண்டே இந்த தம்பதிக்கு ஜெனிபர் என்ற பெண் குழந்தை பிறந்தது.
ரங்கநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், குடும்பம் வறுமையில் சிக்கி தவித்தது. இந்தநிலையில் தான் அமுதா மீண்டும் கர்ப்பமானார். பிரசவத்திற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 1998-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அமுதவல்லி என்று பெயர் வைத்த அவர் கணவருடன் வாழ விரும்பாமல் தாசசமுத்திரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு திரும்பினார்.
40 நாட்களில் தத்து கொடுத்தார்
அங்கு தனது பெண் குழந்தைகளான ஜெனிபர் மற்றும் அமுதவல்லியுடன் வசித்து வந்தார். அப்போது அவர்களை வறுமை வாட்டி வதைத்தது. இதனால் அமுதா செய்வதறியாது திகைத்தார். பின்னர் அவர் தனது நெஞ்சை கல்லாக்கி கொண்டு 2-வது பெண் குழந்தையை தத்து கொடுக்க முடிவு செய்தார். அதன்படி பிறந்து 40 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை ஒரு கிறிஸ்தவ இயக்கத்தின் மூலம்  நெதர்லாந்தை சேர்ந்த தம்பதிக்கு தத்து கொடுத்தார்.
குழந்தையை மகிழ்ச்சியாக பெற்று கொண்ட அந்த நெதர்லாந்து தம்பதியினர் அமுதவல்லியை தங்கள் நாட்டுக்கு எடுத்து சென்று அன்பு காட்டி வளர்த்தனர். இதனால் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்து தற்போது அங்கு அமுதவல்லி அலங்கார பூக்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் தேடல்
இந்தநிலையில் பிறந்து 40 நாட்களில் நெதர்லாந்து சென்ற அமுதவல்லிக்கு 20 ஆண்டுகளை கடந்தபோது தனது சொந்த பெற்றோர் குறித்து தெரியவந்தது. இதனால் அவர் கடந்த 2 ஆண்டுகளாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தனது பெற்றோர் குறித்த விவரங்களை தேடினார். ஆனால் அவருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் சமூக வலைத்தளம் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் கற்று கொண்டார்.
அமுதவல்லியின் தேடல் குறித்து அறிந்த நெதர்லாந்து தம்பதியினர் சொந்த பெற்றோரை தேட அவருக்கு உதவி செய்தனர். அதன்படி 23 ஆண்டுகளுக்கு முன்பு அவரை தாய் தத்து கொடுத்ததாக தெரிவித்தனர். அமுதவல்லிக்கு, தனது தாய் இருக்கும் இடம் சேலம் மாவட்டம் என்பது தெரியவந்தது.
தாயுடன் சந்திப்பு
இதையடுத்து அவர் தனது தாயை தேடி கடந்த சில தினங்களுக்கு முன்பு விமானத்தில் சென்னை வந்தார். டச்சு மொழி சரளமாக பேச தெரிந்த அவருக்கு, ஆங்கிலம் ஓரளவே தெரிந்திருந்தது. இதனால் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் உதவியுடன் சேலம் வந்தார். பின்னர் தனது தாய் பூசாரிப்பட்டி அருகே தாசசமுத்திரத்தில் இருப்பதை அறிந்து கொண்டார்.
இதையடுத்து அவர் தாசசமுத்திரம் சென்று தனது தாயை சந்தித்தார். தனது மூத்த மகள் ஜெனிபர் சாடையில் இருந்தாலும், அமுதவல்லியை, அமுதாவால் யாரென்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
ஆனந்த கண்ணீர்
இதையடுத்து அமுதவல்லி 23 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்ட பெண் குழந்தை நான் தான் என்று அமுதாவிடம் கூறினார். இதனால் அமுதா ஆனந்த கண்ணீர் வடித்தார். இதனைப்பார்த்து அமுதவல்லியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். அவர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி, முத்தம் கொடுத்தனர்.
அப்போது அங்கிருந்த ஜெனிபர் மற்றும் அவருடைய கணவர், குழந்தைகளும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அமுதா, தனது மகள் அமுதவல்லிக்கு தமிழக பாரம்பரிய படி சேலை, நகைகள் அணிவித்து மகிழ்ந்தார். மேலும் கைகளில் மருதாணி போட்டும் அழகுபடுத்தினார்.
நெகிழ்ச்சி
இதுகுறித்து அமுதவல்லி கூறுகையில், பெற்ற தாயை பார்த்தது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. அவர்களின் அன்பும், வரவேற்பும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். தாய் அமுதா கூறுகையில், குடும்ப ஏழ்மை காரணமாக தனது மகள் எங்கேயாவது சந்தோஷமாக இருந்தால் போதும் என்று நினைத்து தான் தத்து கொடுத்தேன் என்றார்.
பிறந்து 40 நாட்களில் குழந்தையாக தத்து கொடுக்கப்பட்ட பெண், தாயை பார்க்க 23 ஆண்டுகள் கழித்து நெதர்லாந்தில் இருந்து சேலம் திரும்பியது அந்த பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Related Tags :
Next Story