ஒரே பள்ளியை சேர்ந்த 7 மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க இடம்


ஒரே பள்ளியை சேர்ந்த 7 மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க இடம்
x
தினத்தந்தி 28 Jan 2022 8:23 PM GMT (Updated: 28 Jan 2022 8:23 PM GMT)

ஒரே பள்ளியை சேர்ந்த 7 மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது

கீரமங்கலம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்த 7 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேற்று நடந்த மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொண்டனர். 
அவர்களில் தீபிகா மதுரை அரசு மருத்துவக்கல்லூரியிலும், வாலண்டினா தேனி அரசு மருத்துவக்கல்லூரியிலும், கனிகா புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி, சுவாதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி, யமுனா திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி, நிஷாலினி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். படிக்க தேர்வு செய்தனர். மேலும், நிஷா என்ற மாணவி திருநெல்வேலி பல் மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வானார்.
பெற்றோர்கள் மகிழ்ச்சி
தங்களது மகள்களுக்கு மருத்துவம் படிக்க மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்ததால் அந்த மாணவிகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தான் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கச் சென்று வருகிறார்கள். 
அந்தவகையில் கடந்த 2 ஆண்டுகளில் 11 மாணவிகள் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்ப பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதேபோல, கடந்த ஆண்டு இதே கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் 4 பேர் டாக்டருக்கு படிக்க தேர்வாகி மருத்துவக்கல்லூரிகளில் படித்து வருகின்றனர் என்று குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 23 பேருக்கு இடம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கீரமங்கலம் பள்ளி உள்பட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் 23 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. அவர்களில், 20 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பையும், மற்ற 3 பேர் பல் மருத்துவ படிப்பையும் தேர்வு செய்துள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். 


Next Story