‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 Jan 2022 1:23 PM GMT (Updated: 29 Jan 2022 1:23 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராமன். இவர், அங்குள்ள டி.டி.டி.ஏ. பள்ளிக்கூடத்தின் பின்புறம் மலை போல் குப்பைகள் குவிந்து கிடப்பதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக குப்பைகள் அப்புறப்படுத்தி சீர் செய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

காட்சி பொருளான குடிநீர் தொட்டி
பாளையங்கோட்டை அருகே உள்ள அரியகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆசிரியர் காலனியில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படாததால், குடிநீர் தொட்டி வெறுமனே காட்சி பொருளாக உள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
பார்வதி சித்ரா, ஆசிரியர் காலனி.

மின்விளக்குகள் எரியவில்லை
தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து அம்பை செல்லும் நெடுஞ்சாலையில் கீழக்கடையம் சந்தை அருகிலும், முதலியார்பட்டி ரகுமத்நகர் பகுதியிலும் ஆபத்தான வளைவு உள்ளது. அந்த வளைவு பகுதி சாலையில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே, ஆபத்தான வளைவு பகுதியில் மின்விளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.திருக்குமரன், கடையம்.

இடிந்து விழும் சுகாதார வளாகம்?
சிவகிரி தாலுகா ராயகிரி நகரப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடுகப்பட்டி வார்டு எண் 2-ல் பொது சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் சுற்றுச் சுவர்கள் பலம் இழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆனாலும் பொதுமக்கள் அதனை தற்போது குளியலறையாகவும் பயன்படுத்தி வரும் அவலம் நீடிக்கிறது. எனவே, பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் கிடக்கும் இந்த சுகாதார வளாகத்தை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ரா.பொன்ராஜ், வடுகப்பட்டி.

நாய் தொல்லை
கீழப்பாவூர் யூனியன் அரியப்பபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பலவேசநாடார்பட்டி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக ரோட்டில் நடந்து செல்ல சிறுவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
என்.முருகேசன், பலவேசநாடார்பட்டி.

ஆபத்தான பள்ளம்
சாத்தான்குளம் பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்லும் பாதையான தெற்கு ரதவீதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அதில் தவறி விழும் அபாயம் உள்ளது. ஏதேனும் சரக்கு வாகனங்கள் வந்தால் மேலும் உடையும் அபாயம் உள்ளது. எனவே, அந்த ஆபத்தான பள்ளத்தை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஹரி கிருஷ்ணன், சாத்தான்குளம்.

பகுதி நேர ரேஷன் கடை
குலசேகரன்பட்டினத்தில் உள்ள ரேஷன் கடையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இதனால் எப்போது பொருட்கள் வாங்கச் சென்றாலும் கூட்ட நெரிசலாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, அந்த கடையை இரண்டாக பிரித்து வடக்கூர் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்துக் கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜா.ஜேம்சன், குலசேகரன்பட்டினம்.

குண்டும் குழியுமான சாலை
சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிக்குளம் வரையிலும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. இதேபோல் புளியங்குளம் விலக்கில் இருந்து மேல நொச்சிகுளம் வழியாக கீழ நொச்சிகுளம் செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறி விட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்.
-அன்றோ ஜெஸ்வந்த், நொச்சிகுளம்.

Next Story