குமரியில் இதுவரை 8 ேபர் வேட்பு மனு தாக்கல்


குமரியில் இதுவரை 8 ேபர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 29 Jan 2022 5:18 PM GMT (Updated: 29 Jan 2022 5:18 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி குமரியில் இதுவரை மொத்தம் 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாகர்கோவில் மாநகராட்சியில் 120 பேர் வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றனர்.

நாகர்கோவில், 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி குமரியில் இதுவரை மொத்தம் 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாகர்கோவில் மாநகராட்சியில் 120 பேர் வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றனர்.
பெண் மனு தாக்கல்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளில் உள்ள 979 வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் ஆற்றூர் பேரூராட்சியில் ஒருவரும், நல்லூர் பேரூராட்சியில் 2 பேரும் என மொத்தம் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 
நேற்று நாகர்கோவில் மாநகராட்சியின் 15-வது வார்டில் சுயேச்சை பெண் வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
4 பேரூராட்சிகளில்...
இதுபோல் இரணியல் பேரூராட்சியின் 4-வது வார்டில் சுயேச்சை ஆண் வேட்பாளரும், கொட்டாரம் பேரூராட்சியின் 12-வது வார்டில் சுயேச்சை ஆண் வேட்பாளரும், முளகுமூடு பேரூராட்சியின் 3-வது வார்டில் சுயேச்சை ஆண் வேட்பாளரும், திருவிதாங்கோடு பேரூராட்சியின் 10-வது வார்டில் சுயேச்சை ஆண் வேட்பாளரும் என 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுவரை பேரூராட்சிகளின் கவுன்சிலர் பதவிகளுக்கு 7 பேரும், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும் என மொத்தம் 8 பேர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நகராட்சிகளின் கவுன்சிலர் பகுதிகளுக்கு யாரும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
120 பேர் மனு வாங்கினர்
ஆனாலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் இருந்து வேட்பு மனுக்களை வாங்கிச் சென்ற வண்ணமாக உள்ளனர். இதனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் வேட்பு மனு வாங்க வந்தவர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
கடந்த 2 நாட்களில் நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டும் 120 பேர் வேட்பு மனுக்கள் வாங்கிச் சென்றதாகவும், அதில் ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

Next Story